சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வந்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது பயணப் பையில் இருந்து மூன்று கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறை வசதியின் ஊடாக இந்த தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களை கொண்டு வரும்போது அலி சப்ரி சிக்கினார். முறையான சுங்கப் பரிசோதனை இன்று அதிகாலை 04.00 மணியளவில் நிறைவடைந்ததாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பாராளுமன்ற உறுப்பினரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க பிஸ்கட்கள், நகைகள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் என்பனவற்றை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டதுடன், இந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எழுபத்தைந்து இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
அலி சப்ரி இன்று அதிகாலை இந்த அபராதத்தை செலுத்திவிட்டு சுங்கத் தலைமையகத்தை விட்டு வெளியேறியுள்ளார் .