♦விகர்ணன்
வடக்கில் கடந்த சில மாதங்களாகப் பேசுபொருளாக்கப்பட்ட அரச பதவி நிலைகளில் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் பதவியே முன்னிலையில் இருக்கிறது.
இலங்கையிலேயே மிகப் பாரிய எண்ணிக்கையில் வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் மற்றும் நிலப்பரப்பளவினைக் கொண்டது யாழப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஆள்புலப் பரப்பாகும். அந்தப் பாரிய பொறுப்போடு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்ற மிகப் பெரும் பழுவையும் சுமந்தவர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன்.
அக்காலப் பகுதியில் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஆள்புல எல்லைக்குள்ளேயும் மாகாண மட்டத்திலும் அவரால் வளப் பங்கீடுகள் சரியான வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகம் முன்வைக்கப்பட்டிருந்தன.
உதாரணமாக வடக்கில் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக சேவை வழங்கும் நிலையமான வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்காக கட்டடத்தொகுதி 2017 ஆம் ஆண்டிலிருந்து நிதி ஒதுக்கீடு இன்மையால் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தின் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2017ற்கும் 2022 ற்கும் இடையான காலப்குதியில் கொடைவழங்குனர்கள் மூலம் பலமாடி நோயாளர் விடுதித் தொகுதி உட்பட ஆகக் குறைந்தது 15 வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்காக கட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு இன்மையால் அதே 2017 ஆண்டிலிருந்து கட்டிமுடிக்கப்படாமல் இருந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்காக கட்டடத்தொகுதி நன்கொடையாளர்கள் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டில் கோலாகலமாக மலர் வெளியிட்டு திறக்கப்பட்டாயிற்று (இருப்பினும் வைத்தியசாலை நிர்வாகத்தின் திறமையின்மை காரணமாக இந்தப் பிரிவு இயங்கு நிலைக்கு கொண்டுவரப்படாமல் மூடப்பட்டுள்ளது).
மேற்படி நன்கொடையாளர்களில் டில்மா தேயிலை நிறுவனம் போன்ற உள்ளுர் நன்கொடையாளர்களும் அடங்குவர்.
இவர்கள் தமக்கு செயற்திட்டங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கும்போது அப்போதைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தமக்கு விருப்பிற்குரிய பகுதிகளுக்கே அக்கொடையாளர்களை திருப்பி விட்டார் என்ற குற்றச்சாட்டும், அவ்வாறு செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் உரிய அனுமதி இன்றிச் செயற்படுத்தப்பட்டதான கணக்காய்வு திணைக்களத்தின் அவதானிப்புகளும் கேதீஸ்வரனுக்கு எதிரான வலுவான குற்றச்சாட்டுகளாக திரண்டிருந்தன.
இந்நிலையில் ‘வீதியில் போகும்போது தெரு நாய் கலைத்துக் குலைத்தாலும் மாகாணப் பணிப்பாளருக்கு அழைப்பு மேற்கொண்டு தெருநாய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என்று கேட்கும் அதிபுத்திசாலி வடக்கின் அதி உச்சப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அவரிடம் அப்போதைய மாகாணப் பணிப்பாளர் கேதீஸ்வரன் குறித்து பல்வேறு தரப்பினரால் பல்வேறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கேதீஸ்வரன் வருடாந்த இடமாற்றத்தின்படி யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் பதில் கடமையாற்றத் தொடங்கியதும் அவருக்கு எதிரானவர்கள் தமது அழுத்தத்தினை வடக்கின் அதி உச்சப் பதவியில் இருந்தவருக்கு வழங்கத் தொடங்கினர்.
இதன் விளைவாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவரை உடன் நியமனம் செய்யுமாறு வடக்கின் ஆளுநர் மத்திய சுகாதார அமைச்சிடம் நேரடியாகவும் கடிதம் மூலமும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தபடி இருந்தார். இருப்பினும் வடக்கில் எவரும் அந்தப் பதவியை பொறுப்பேற்பதற்குத் தயாராக இருக்காததால் சுகாதார அமைச்சு எவ்வித நடவடிக்கையினையும் உடனடியாக எடுக்கவில்லை.
சிங்களவர் நியமனம்
ஆளுநரின் தொடர் தொல்லையை தாங்க முடியாத சுகாதார அமைச்சு வடக்கிற்கு சிங்களவர் ஒருவரை நியமிக்கும் நிலைப்பாட்டினை எடுத்தது.
வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளராக சிங்களவர் ஒருவரை நியமனம் செய்யப் போவதான தகவல் சுகாதார அமைச்சிலிருந்து கசிந்ததும் அப்போது பதில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் பதவி வகித்த கேதீஸ்வரன் தன்னால் ஆன முயற்சிகளை எடுக்கத்தொடங்கினார். தனக்கு நெருக்கமான பீடத்தின் அதிபதி உட்பட எவர் சுகாதார அமைச்சின் உயர் மட்டங்கள் மற்றும் அரசியல் உயர் மட்டங்களில் செல்வாக்கு உள்ளவர்கள் என கருதினாரோ அவர்களுக்கு எல்லாம் தொடர்பு கொண்டு ‘ஆபத்து வருகிறது’ என்று உதவி கோரினார்.
ஆனால் திடீரென ஒரு காலையில் நியமனக் கடிதத்துடன் சிங்களவரான வைத்தியகலாநிதி திலிப் லியனகே பிரசன்னமானபோது தமக்கே உரிய பவ்வியத்துடனும் பணிவுடனும் பதவியைக் கையளித்துவிட்டு வெளியேறினார் கேதீஸ்வரன்.
கிலிகொண்ட சிலர்
புதிதாகப் பொறுப்பேற்ற மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வேகமாக எடுத்த நடவடிக்கைகள் பலருக்கும் கலக்கத்தை கொடுத்தன. முக்கியமாக மாகாண சுகாதாரப் பணிமனை பணியாளர்களது கடமை நேரம் தொடக்கம் வெளிநாட்டு உள்நாட்டு கொடையாளர்களிடம் இருந்து நன்கொடைகள் பெறப்படும் முறைகள், அதன் வெளிப்படைத் தன்மைகள், பொதுச் சொத்துகளான சுகாதாரத் திணைக்கள வளங்கள் பயன்படுத்தப்படும் வழிவகைகள், வைத்தியசாலைகள் எந்நேரமும் இயங்கு நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துதல், வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையாளர்கள் கடமையில் இருப்பதை உறுதிப்படுத்தல் முதலிய பல நடவடிக்கைகள் பலருக்கு உவப்பாக இருக்கவில்லை என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, சிங்கள மாகாணப் பணிப்பாளர் எடுத்த இரண்டு நடவடிக்கைகள் வடக்கு சுகாதாரத் துறையின் முக்கிய புள்ளிகள் சிலருக்கும் புலம்பெயரிகள் சிலருக்கும் கலக்கத்தை கொடுத்தது என விபரிக்கிறார்கள் விடயம் அறிந்தவர்கள்.
சம்பவம் 1: புதிய வாகனம் ஒன்று மாகாணப் பணிப்பாளர் பணிமனையில் இருந்துள்ளது. இந்த வாகனத்திற்கான எரிபொருள் சுகாதார திணைக்களத்தினால் நிரப்பப்பட்டு வந்துள்ளது. குறித்த வாகனம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஆராய்ந்த சிங்களவரான மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உரிய பதில் கிடைக்காமையால் வாகனம் குறித்த விபரங்களைக் கோரியபோது அதுவும் வழங்கப்படவில்லை. இதனால் அவரே மோட்டார் பதிவுத் திணைக்களத்தினைத் தொடர்பு கொண்டு பெற்ற விபரங்களின் படி அந்த வாகனம் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாக இருப்பதை கண்டறிந்தார்.
உடனடியாக வாகனத்தைப் பணிமனையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுவிட்டு, வடக்கு சுகாதாரச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு விபரமான அறிக்கை சமர்ப்பித்த சிங்கள மாகாணப் பணிப்பாளர் இது தொடர்பாக மேலதிக விளக்கம் கோரி யாழ்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான கேதீஸ்வரனுக்கு கடிதம் அனுப்பினார்.
அதற்கான பதில் கிடைப்பதற்கு முன்னர் குறித்த வாகனத்தினை விடுவிக்கும்படி மாகாணப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தும்படி ஆளுனரின் உத்தரவு வடக்கு சுகாதாரச் செயலாளருக்கு வந்தது. இதிலுள்ள நிதி நிர்வாகச் சிக்கல்கள் குறித்து நன்கு அறிந்தவரான வடக்கு சுகாதாரச் செயலாளர் அமைதியாக இருந்தபோது ‘மாகாணப் பணிப்பாளர் சொந்தத் தேவைக்காக நோயாளர் காவுவண்டியை கையகப்படுத்தியுள்ளார். அதுகுறித்து தெரிந்து கொண்டும் வடக்கின் சுகாதாரச் செயலாளர் வாய்மூடி இருக்கிறார்’ என்ற சாரப்பட்ட ஊடகங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் செய்தி பரப்பினர்.
சம்பவம் 2: மன இறுக்கத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகளை அதிலிருந்து மீட்பதற்கான ஒரு நிலையம் யாழ்ப்பாணத்தின் பிரபல வைத்திய நிபுணரால் ஆரம்பிக்கப்பட்டு வடக்கு மாகாண சபையின் அப்போதைய சுகாதார அமைச்சரான மருத்துவர் சத்தியலிங்கத்தினால் ஆதரவளிக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்டது. இந்த நிலையம் குறித்த புகார் ஒன்று சனாதிபதி அலுவலகத்திற்கு சென்ற நிலையில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சனாதிபதி அலுவலம் கேட்டிருந்தது. இதனையடுத்து அந்த நிலையம் குறித்த விபரங்களை கோரிய மாகாணப் பணிப்பாளருக்கு குறித்த நிலையம் தொடர்பான எதுவித தகவலும் அவரது பணிமனையில் கிடைக்கவில்லை. இதனால் அது தனியார் நிலையமா அல்லது சுகாதார திணைக்களத்திற்குரிய நிலையமா என்ற குழப்பம் நேரிட்டது.
இறுதியில் தாமே நேரில் சென்ற சிங்கள மாகாணப் பணிப்பாளருக்கு அங்கும் எதுவித தகவலும் கிடைக்கவில்லை. அங்கிருந்தவர்களால் பொறுப்பு வைத்தியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் ‘தாம் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் என்றும், இந்த நிலையத்தில் பணியாற்றும்படி தமது மேலதிகாரியான வைத்திய நிபுணர் பணித்ததன்படி இந்த நிலையத்தில் கடமையாற்றுகிறேன்’ என்றும் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து சிங்கள மாகாணப் பணிப்பாளர் ‘மாதவம் நிலையம் மாகாண சுகாதார அமைச்சின் கீழா வருகிறது?’ என்று கேட்டதற்கு பதில் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. 2015ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட சுகாதார நியதிச் சட்டத்திலும் குறித்த நிலையத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
குறித்த நிலையம் எவருடயை ஆளுகையின் கீழ் வருகிறது என்பது தெரியாமையினால் இது பற்றி ஆராய்ந்து சனாதிபதி செயலகத்திற்கு உரிய பதிலை வழங்குமாறு வடக்கு பிரதம செயலாளருக்கு அறிக்கை ஒன்று சிங்கள மாகாணப் பணிப்பாளரால் வழங்கப்பட்டது.
பதறிப்போன பங்காளிகள்
இவ்வாறாக சிங்கள மாகாணப் பணிப்பாளர் மேற்படி நிலையத்திற்கு சென்ற தகவல் பரவியதையடுத்து வடக்கு சுகாதாரத்துறையின் முக்கிய புள்ளிகள் சிலருக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. அவர்கள் உடனடியாகவே “சிங்கள மாகாணப் பணிப்பாளர் குழந்தைகளுக்கான மாதவம் சேவை நிலையத்தினை மூட எத்தனிக்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகளுக்காகவே அவர் வடக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளார்” என்ற தகவலை பரப்பத் தொடங்கியதுடன், அவரை அவரது அலுவலகத்தில் சந்திக்க அனுமதி கேட்டனர். அதன்படி சந்தித்தவர்களுக்கு அவரால் கேட்டப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லை. முக்கியமாக “குறித்த நிலையம் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின்கீழ் உள்ளதா அல்லது தனியார் நிலையமா?” என்ற கேள்விக்கு அவர்களால் பதில் அளிக்கமுடியவில்லை. “எவரது அனுமதியுடன் அது இயங்குகிறது? நிதி ஒதுக்கீடு எவ்வாறு எவரால் மேற்கொள்ளப்படுகிறது? நிதித்தணிக்கை (Financial audit) யாரால் மேற்கொள்ளப்படுகிறது?” போன்ற கேள்விகள் அவர்களைத் திணற வைத்தன என்றார் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஒரு அதிகாரி.
அந்தச் சந்திப்பில் இருந்து வெளியேறிய அவர்கள் வடக்கின் உச்ச அதிகாரத்தில் இருந்தவரிடம் கூட்டாகச் சென்று ‘சிங்கள மாகாணப் பணிப்பாளர் எங்களை அவமதித்து விட்டார். இதுவரைகால சேவைக்காலத்தில் இவ்வாறு எவரும் அவமதித்தது இல்லை’ என்று ஓலமிட்டார்களாம். அதை நம்பிய அவர் “அன்றிலிருந்து இறுதிவரை சிங்கள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை அகற்றுவதற்கு தன்னாலான சகல முயற்சிகளையும் எடுத்தார்” என்று அந்த அதிகாரி சொன்னார்.
குறித்த ‘பாதிக்கப்பட்ட’ தரப்புகளது ஆலோசனைப்படி நாட்டின் தேசிய மனநலக் கொள்கைக்கு (National Mental Health Policy) முரணாக, மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் வடக்கு மாகாண சுகாதாரத் சேவைகள் பணிப்பாளரால் நிர்வகிக்கப்பட்ட மாவட்ட உளநல சேவைகள் பதில் சுகாதார அமைச்சராக செயற்பட்ட மத்திய அரசின் பிரதிநிதியான வடமாகாண ஆளுனரது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டன.
‘அதன்மூலம் மனஇறுக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதவம் உள்ளிட்ட உளநல சேவை நிலையங்களை மாகாண சுகாதார சேவைகள் பணிமனை கண்காணிக்க முடியாது தடைசெய்யப்பட்டது’ என்று மாகாண சுகாதார சேவைகள் பணிமனை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
ஏலவே மாகாணத்தை நிர்வகிக்கும் மத்தி
அது அவ்வாறிருக்க, “நிலமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்ட கேதீஸ்வரன் பழைய ஆவணங்களைப் புரட்டி அப்போதைய மாகாண அமைச்சர்கள் வாரியம் மனஇறுக்கம் கொண்ட குழந்தைகளுக்கான புனர்வாழ்வு மையத்தினை வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அனுமதியும் அதற்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கான வழிகாட்டல்களையும் வழங்கியிருந்த கடிதத்தினைக் கண்டுபிடித்தார்” என்கிறார் யாழ் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர்.
அதாவது, மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் செயற்படவேண்டிய மாதவம் சிகிச்சா நிலையம் குறித்த எந்த ஆவணமோ அல்லது அறிக்கைகளோ (Reports/ returns) மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்திருக்கவில்லை. அதிலும் முக்கியமாக மாகாண நிதிவிதிகளின் கீழ் நிதி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டிய இந்த சிக்சாநிலையம் எவ்வாறு நிதிபெற்று எவ்வாறு செலவு செய்கிறது என்ற விபரமும் மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இல்லை.
மேலும் மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கவேண்டிய சிகிச்சா நிலையத்திற்கு பொறுப்பு வைத்தியராக இனங்காட்டப்பட்டவர் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் யாழப்பாணப் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒரு வைத்தியர். அவ்வாறானால் தற்போது மத்தி மாநிலம் என்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் ஏன் அது குறித்து ஒரு வார்த்தையேனும் பேசவில்லை?
சிங்களப் பணிப்பாளர் தூக்கப்பட்டாரா?
‘கொழும்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றிய திலிப் லியனகேயை வடக்கிற்கு அனுப்பும்போது வழங்கியிருந்த வாக்குறுதியின்படி, சுகாதார அமைச்சில் பணிப்பாளர் ஒருவர் வெளிநாட்டு மேற்கல்விக்காக 01.05.2023 சென்றதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு 02.05.2023 அன்று நியமித்தது சுகாதார அமைச்சு’ என அமைச்சின் அதிகாரி ஒருவர் எமக்கு உறுதிப்படுத்தினார்
அவ்வாறு நியமனம் செய்யும்போது ‘மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரது கடமைகளை தற்காலிகமாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தியிடம் அவர் 17.05.2023 அன்று நாடு திரும்பியதும் கையளித்துவிட்டு’ வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தாம்.
இருப்பினும் “சுகாதார அமைச்சில் வெற்றிடமான பணிப்பாளர் பதவியானது மிகவும் முக்கியமானதும் ‘பெறுமதியானதும்’ ஆகையினால், பல வைத்தியர்கள் அந்த வெற்றிடத்தைப் பெறுவதற்கான அழுத்தங்களையும் நகர்வுகளையும் ஆரம்பித்தனர். இதனால்தான் அவசர அவசரமாக சிங்கள மாகாணப் பணிப்பாளர் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமாரினிடம் பதவிகளைப் பொறுப்பளித்துவிட்டு இரவோடு இரவாக கொழும்பு சென்றார்” என்கின்றனர் மாகாண சுகாதாரப் பணிமனை ஊழியர்கள்.
ஆனால் அவரை அகற்றுவதில் அக்கறையாக இருந்த ‘பாதிக்கப்பட்ட’ தரப்பினர், உடனடியாகவே சிங்கள மாகாண சேவைகள் பணிப்பாளர் தூக்கப்பட்டார், ஆளுனரால் துரத்தப்பட்டார் என எழுதி மகிழ்ந்தனர்.
மாற்றப்பட்ட கடவுச்சொற்கள் (Passwords)
தமது பொட்டுக்கேடுகள் வெட்டவெளிச்சமாகிவிடும், வருமான வழிகள் அடைபட்டுவிடும் என்ற அச்சத்தில் சிங்கள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை செயற்படவிடாது தடுத்த தரப்பினர், மீண்டும் தமது ஆட்சி மலர்ந்தது என்ற மகிழ்ச்சியில் ‘மாகாண சுகாதார சேவைகள் பணிமனையினுள் நுழைந்து மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் முக்கியமான உத்தியோகபூர்வ மின்னஞ்சல்களது கடவுச் சொற்களை மாற்றியது மட்டும் அல்லாது, ஒவ்வொரு தடவையும் உள்நுழையும் போது அத்தருணத்தில் குறுஞ்செய்தி மூலம் கடவுச்சொல்லை (OTP) பெறும்வகையில் அவர்களது கைத்தொலைபேசி இலக்கத்தையும் உள்ளிட்டுச் சென்றிருக்கிறார்கள்’ என மாகாண சுகாதாரப் பணிமனையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘அதே தரப்பினர் சத்தியமூர்த்தி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்காலிக கடமையேற்பதைத் தடுத்து மீண்டும் கேதீஸ்வரனை அந்தக் கதிரையில் அமர்த்துவது அல்லது அவரால் கைகாட்டப்படும் ஒருவரை அமர்த்துவது என்ற நோக்கத்துடன் பல்வேறு தளங்களில் கடுமையாக உழைக்கத் தொடங்கினார்கள்.’
‘இதை அனைத்தையும் மீறி தற்போது சத்தியமூர்த்தி அந்தக் கதிரையில் அமர்ந்ததை சீரணிக்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்து அவரை எப்படி துரத்தலாம் என்று அந்தரிக்கிறார்கள். அதற்காக அவர்கள் மாகாண அதிகாரங்கள் குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். மாகாண அதிகாரங்கள் குறித்து உண்மையான அக்கறையோடு செயற்படுபவர்களை இவர்கள் தமது நலன்களுக்காகப் பயன்படுத்த முனைகிறார்கள்’ என்பதே உள்ளிருந்து கிடைக்கும் தகவல் ஆகும்.
இரட்டை வேடதாரிகள்
இலங்கையில் உள்ள பதினெட்டு மாவட்டப் பொது வைத்தியசாலைகளில் ஒன்பது மாவட்டப் பொது வைத்தியசாலைகள் மாகாண சுகாதாரத் தணைக்களங்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவற்றினை மத்திய அரசிற்கு உள்வாங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் மத்திய அரசினால் தயாரிக்கப்பட்டபோது அதற்கான சம்மதம் மாகாணங்களிடம் நேரடியாகக் கோரப்பட்டது. அவ்வேளையில் மாகாண சுகாதார செயலாளராக இருந்தவர் திருவாகரன், மாகாண சேவைகள் பணிப்பாளராக இருந்தவர் கேதீஸ்வரன். ‘அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவேயில்லை’ என்கின்றனர் விடயம் அறிந்தவர்கள்.
“குறித்த மாவட்டப் பொது வைத்தியசாலைகளை மத்திக்கு உள்ளீர்க்கும் நடவடிக்கையானது தம்மை இனங்காட்ட விரும்பாத சிலரது நகர்வுகளால்தான் இன்றுவரை தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர தற்போது நீலிக் கண்ணீர் வடிப்பவர்களால் அல்ல என்கிறார்கள்” அவர்கள்.
அந்த அமைச்சரவைப் பத்திரம் விவாதத்திற்கு எடுக்கப்படுவதற்கு முதல் நாள் , அமைச்சரவை அமைச்சராக இருக்கும் வடபகுதித் தமிழரின் ஆலோசகரை ஊடகவியலாளர்கள் தொடர்புகொண்டுள்ளனர். அமைச்சரவை விவாதத்தின்போது வடக்கில் உள்ள மாவட்டப் பொது வைத்தியசாலைகளை மத்திய அரசினுள் உள்வாங்குவதை அமைச்சர் ஊடாகத் தடுக்குமாறு கோரியபோது அதுகுறித்து சாதகமாகப் பதிலளிக்காதவர், “அது அபிவிருத்திக்காகத்தானே” என்று சப்பைக்கட்டு கட்டியவர் தற்போது சத்தியமூர்த்தி பதவியேற்றதும் மத்தி மாநில அதிகாரம் குறித்து உரத்துப் பேசுகிறார். மத்திய அரசினால் மாகாண சபைகளின் அதிகாரங்கள் பாதிக்கப்படும் வகையில் அல்லது பலவீனப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதெல்லாம் அமைச்சரவையில் அமைதியாக வாய் மூடி இருந்த இந்த தரப்பினர்கள் பதில் கடமையை சத்தியமூர்த்தியிடம் வழங்கிய போது மாகாண அதிகாரம் பாதிக்கப்படுகிறது என்று கதை விடுவது கேலிக்குரியதாக உள்ளது. வடக்கின் பிரதம செயலாளர் பதவி சிங்களவர் ஒருவருக்கு வழங்கிய போதும் நவதுவராங்களையும் மூடிக்கொண்ட இவர்கள். இன்று கூச்சலிடுகின்றனர்.
மாகாண சபையினை பலவீனப்படுத்தும் வகையிலும், அல்லது வடக்கில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாகும் வகையில் தொல்லியல், வனவள திணைக்களங்களின் நடவடிக்கைகள் இடம்பெற்ற போது கண்களை இறுக்க மூடிக்கொண்டவர்கள் சத்தியமூர்த்திக்கு பதில் கடமையாற்ற வாய்ப்பளிக்கப்பட்ட போது நித்திரையால் எழும்பியவர்கள் வாய் பிசுத்துவது போன்று அறிக்கை விடுகின்றனர்.
இதேவேளை மத்திய அரசின் உயர்கல்வி அமைச்சின் கீழ்வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட ஆயத்தங்கள் செய்யப்பட்டன. இதற்குப் பின்னணியில் இயங்கியவர்கள் அதே ‘பாதிக்கப்பட்ட’ தரப்பினர்தான் என்ற தகவலும் எமக்குக் கிடைத்தது.
மாகாண அதிகாரத்தை காத்த சிங்களவர்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மறைமுக நோக்கம் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ்வரும், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் உளவளத்துணை தொடர்பான சிகிச்சா நிலையங்கள் உள்ளிட்ட சகல உளவத்துணை நிலையங்கள் மற்றும் செயற்பாடுகளை மத்திய அரசின் கீழ் வரும் யாழ்ப்பாண மருத்துவபீடத்தில் பணியாற்றும் ஒருவரின்- சிங்கள மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் தம்மை வாழ்நாளில் எவரும் திட்டாத அளவு திட்டினார் என முறையிட்டவரின்- கீழ் கொண்டுவருவதாக இருந்ததாம்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சாட்சிக் கையொப்பம் இடுபவராக அப்போது வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக இருந்த சிங்களவர் திலிப் லியனகேயினை அதனைத் தயாரித்தவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்தவர் “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக இல்லை என்பதே எனது கருத்து. இந்த ஒப்பந்தம் மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரங்களையும் வளங்களையும் மத்திய அரசின் ஆளுகையின் கீழ் வரும் ஒரு நிறுவனம் நிர்வகிக்கவும் பயன்படுத்தவும் வழிகோலும். ஆதனால் இதற்கு என்னால் சாட்சிக் கையொப்பம் இட முடியாது” என மறுத்துவிட்டார். அத்துடன் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தப் பிரதியினை சட்டமா அதிபரது ஆலோசனைக்காக அனுப்பிவைத்தார்’ என்று மாகாண சுகாதாரப் பணிமனை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
இதனையடுத்து பெரிய ஆசிரியர்கள் அங்கும் இங்கும் ஓடி சிங்கள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது அழுத்தம் பிரயோகிக்க எடுத்த முயற்சிகள் கைகூடவில்லையாம். “என்னால் இந்த மக்களுக்கு துரோகம் செய்து அவர்களது அதிகாரத்தை இழக்க வழிகோல முடியாது. வேண்டுமானால் வேறு யாரையாவது சாட்சிக் கையெழுத்துக்காகப் போட்டு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளுங்கள்” என்று வடக்கின் உச்ச பதவியில் இருந்தவருக்கு முகத்திலடித்தாராம் திலிப் லியனகே.
மத்தியா மாகாணமா எம்மவரா?
தற்போது உள்ள நிலையில் தற்காலிகமாகப் பதவியில் இருக்கும் சத்தியமூர்த்தியை விலகுமாறு கோருவதோ அல்லது இரண்டில் ஒரு பதவியை எடுக்குமாறு கூறுவதோ ஆபத்தைத்தான் கொண்டுவரும் என விடயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
காரணம் அவரது கையில் இருக்கும் இரண்டு பதவிகளும் மிக முக்கியமானவை. யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் அவர் இருக்கும் வரை வேறு எவரையும் நியமிக்க முடியாது. நேரடியாகச் சொல்வதானால் வடக்கின் ஒரே ஒரு போதனா வைத்தியசாலையானது தமிழர் ஒருவரது கைகளில் இருக்கும்.
அவ்வாறே மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக அவர் பதில் கடமையாற்றும்வரை வெளியாட்கள் எவரும் நியமிக்கப்படும் சாத்தியம் இல்லை.
வடமாகாணத்தில் தற்போது பிரதம செயலாளராக இருப்பவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டபோது அதனைப் பொறுப்பேற்பதற்கு முற்றாக விரும்பவில்லையாம். ‘தம்மை விட மூத்த அதிகாரிகள் வடக்கிலேயே இருக்கும் போது மொழிதெரியாத தாம் அங்கு செல்லவில்லை’ என்று மறுத்துப் பார்த்திருக்கிறார். அதற்கு முன்னாள் சனாதிபதி கோத்தபாயா “அங்கு தகுதியானவர்கள் இருக்கலாம் ஆனால் ஒற்றுமை இல்லை. வடக்கில் உள்ள இரண்டு அரசியல்வாதிகள் ஆளுக்கு மூன்று அதிகாரிகள் வீதம் ஆறு அதிகாரிகளது பெயர்களை பரிந்துரைத்துள்ளார்கள். ஏதாவது அதிகாரியின் பெயர் அந்த இரண்டு அரசியல்வாதிகளது பட்டியல்களிலும் வந்திருந்ததா என்று தேடிப்பார்த்தேன் ஆனால் இருக்கவில்லை. அப்படி இருக்கையில் நான் அந்த ஆறு பேரில் எவரையாவது நியமித்தால் அவரை மற்றைய அரசியல் தரப்பு எதிர்க்கும். அவரால் சுமுகமாக மாகாண நிர்வாகத்தை இயக்க முடியாது. அதனால்தான் உங்களை நியமனம் செய்தேன்” என்று சொன்னாராம்.
எனவே மத்தியா? மாகாணமா? என்பததை விட ‘எவ்வாறு எமது பிரதேசத்தில் இரண்டையும் எம்மவர்கள் கரங்களில் வைத்திருக்கலாம்?’ என்பது பற்றி சிந்திப்பதுதான் தற்போதைய தருணத்தில் புத்திசாலித்தனமானது.



