பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடப்பு சம்பியனான ரஃபேல் நடால், காயம் காரணமாக இம்முறை தொடரில் விளையாடமல் விடக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இம்முறை அவர் பிரெஞ்ச் ஓபனை தவற விட்டால், கடந்த 19 ஆண்டுகளில் முதல் முறையாக பிரெஞ்ச் ஓபனில் விளையாடமல் விடும் முதலாவது சந்தர்ப்பமாக அமையும்.
நடால் அடுத்த மாதம் தனது 37வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். களி மண் தரை போட்டிகளில் 14 ஒற்றையர் சாம்பியன்ஷிப்களை வென்று சாதனை படைத்துள்ள நடால், களி மண் தரை டென்னிஸின் மன்னர் என வர்ணிக்கப்படுகிறார்.
அவுஸ்திரேலிய ஓபன் இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீரரான மெக்கென்சி மெக்டொனால்டிடம் தோல்வியடைந்த பின்னர் அவர் டென்னிஸ் போட்டிகளில் விளையாடவில்லை.
22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவரது இடுப்பு பகுதி மூட்டு நெகிழ்வால் தசைக்கிழிவினால் அவதிப்படுகிறார்.
அவுஸ்திரேலிய ஓபனில் இருந்து அவர் வெளியேறிய போது, ஆறு முதல் எட்டு வாரங்கள் மட்டுமே ஓய்விலிருக்க வேண்டுமென முதலில் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பிரச்சினை விரைவில் குணமடையவில்லை.
டுபாய், இந்தியன் வெல்ஸ், மியாமி, மான்டே கார்லோ, பார்சிலோனா, மாட்ரிட் மற்றும் இந்த வாரம் ரோமில் நடந்த இத்தாலிய ஓபன் ஆகிய இடங்களில் நடந்த முக்கிய போட்டிகளை நடால் தவறவிட்டார்.
ஸ்பெயினில் உள்ள அவரது ரஃபா நடால் அகாடமியில் வெள்ளிக்கிழமை காலை ஒரு செய்தியாளர் சந்திப்பை அழைத்துள்ளார், அங்கு அவர் பிரெஞ்ச் ஓபனில் விளையாட முடியாதது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெஞ்ச் ஓபன் மே 29 திங்கள் அன்று தொடங்க உள்ளது.
நடால் 2004 ஆம் ஆண்டு இடது கணுக்காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக பிரெஞ்ச் ஓபனை தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.