தையிட்டியில் சட்டவிரோத பௌத்த விகாரை அமைத்தது மட்டுமல்லாமல், பொலிஸ் மற்றும் இராணுவ பிரசன்னத்துடன் தமிழர்கள் அந்த பகுதிக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டு, அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை கண்டித்து யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலிருந்து தமிழ் எம்.பிக்கள் 4 பேர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலையில் போராட்ட இடத்துக்கு சென்றதையும், அங்கு தடுப்பு அமைக்கப்பட்டு, உள்ளேயிருந்து வெளியேயும், வெளியேயிருந்து உள்ளே செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதை சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
ஏற்கெனவே விகாரைக்கான ஆரம்ப பணிகள் நடந்த போது பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில், விகாரை கட்ட அனுமதி வழங்குவதில்லையென தீர்மானம் எடுக்கப்பட்டதை எம்.ஏ.சுமந்திரனும், இ.அங்கஜனும் சுட்டிக்காட்டினர்.
தான் தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்ட தலைவராக இருந்த போது, விகாரை கட்ட அனுப்பதில்லையென தீர்மானம் எடுக்கப்பட்டதை அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, மக்கள் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்ததுடன், தையிட்டிக்கு மக்கள் போராட்ட களத்துக்கு செல்வதாக அறிவித்தனர்.
இந்த விவகாரம் பற்றி ஜனாதிபதியுடன் பேசுவதாக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.




