தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 5 பேரையும் பிணையில் விடுவித்தார் மல்லாகம்நீதவான் நீதிமன்ற நீதிபதி காயத்ரி சைலவன்.
அத்துடன், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமையை தடுக்க முடியாது என பொலிசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத விகாரைக்கு எதிராக நேற்று ஆரம்பித்த போராட்டத்திற்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தியதுடன், போராட்டக்காரர்கள் 2 பேரையும், போராட்டக்களத்துக்கு பந்தல் அமைக்க வந்த 3 பேரையும் கைது செய்தனர்.
அத்துடன், போராட்டக்களத்திற்குள் மக்கள் நுழைய முடியாதவாறு தடுப்பு வேலிகள் அமைத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் பலாலி பொலிசார், மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தினர்.கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் முன்னிலையாகினார்.
அமைதியான வழியில் போராட்டம் நடத்தியவர்களை பொலிசார் கைது செய்ததை சுட்டிக்காட்டியதையடுத்து, நீதவான் அவர்களை பிணையில் விடுவித்தார்.
விகாரைக்கு முன்பாக போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டுமென பொலிசார் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்த்து விட்டு உத்தரவு வழங்குவதாக நீதவான் குறிப்பிட்டார்.
இன்று மாலை போராட்டக்களத்துக்கு வந்த நீதவான், நிலைமைகளை அவதானித்த பின்னர், மக்களின் அமைதியான போராட்டத்துக்கு பொலிசார் இடையூறு விளைவிக்க கூடாதென உத்தரவிட்டார்.




