ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கைக் குழந்தைகளைக் கடத்தும் குழுவை கைது செய்துள்ளதாக மலேசிய குடிவரவுத்துறை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 12 ஆம் திகதி 37 மற்றும் 26 வயதுடைய மலேசிய தம்பதியினர் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த மோசடி அம்பலமானதாக அதன் இயக்குநர் ரஸ்லின் ஜூசோ கூறினார்.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட மலேசியப் பெற்றோரை, பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் தயாரிக்க, பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழுடன் குடிவரவுத் துறைக்கு வருமாறு இந்த கும்பல் வழிநடத்தியதாக ரஸ்லின் கூறினார்.
பெற்றோர்கள் வரும்போது, அவர்களின் பிள்ளைகளுக்குப் பதிலாக சம வயதுடைய இலங்கைப் பிள்ளைகளை புகைப்படம் மற்றும் கைரேகை எடுக்க வைத்து, பின்னர் வெற்றிகரமாக கடவுச்சீட்டு பெறும் இலங்கைக் குழந்தைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச் செல்வதாக குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டத்தோ ரஸ்லின் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மலேசிய குழந்தை கவுண்டரில் இருக்கும்போது, இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட குழந்தை ஒத்த வயதை உடையதாக இருக்கும், இலங்கைக் குழந்தை புகைப்படம் எடுப்பதற்கும் கைரேகை பதிவுக்கும் அனுப்பப்படும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த செயற்பாட்டை வழிநடத்திய சந்தேக நபர், கடவுச்சீட்டை வெற்றிகரமாகப் பெற்ற இலங்கைக் குழந்தைகளை ஐரோப்பாவிற்கு அழைத்து வரும் “போக்குவரத்து செய்பவராகவும்” இருப்பார்.
எத்தனை குழந்தைகள் இதில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் கும்பல் எவ்வளவு காலம் செயல்பட்டது என்பதைக் கண்டறிந்து தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன.
“முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பாஸ்போர்ட் பெற்று ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் 30,000 முதல் 50,000 யூரோக்கள் இந்தக் கும்பலால் செலுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.
பாஸ்போர்ட் பெற கோலாலம்பூரில் உள்ள குடிவரவுத் துறை கிளைக்குச் சென்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டனர், மேலும் விண்ணப்பச் செயல்பாட்டின்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
குழந்தையை நேர்காணல் செய்j அதிகாரி, பாதுகாவலருடனான தோற்றத்தில் உள்ள வித்தியாசம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருப்பதையும், அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைக் குழந்தைக்கு மலாய்மொழி பேசத் தெரியாது என்பதையும் கண்டறிந்ததால், விரைவான நடவடிக்கை எடுத்தார்.
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் (Atipsom) 2007 இன் பிரிவு 26A இன் கீழ் தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டு, மே 11 அன்று வழக்கு குறிப்பிடப்படும் வரை காஜாங் சிறையில் அடைக்கப்பட்டதாக அவர் கூறினார்.



