பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு இறந்ததாக குறிப்பிடப்படும் விவகாரத்தில், இன்று வைத்தியர்கள் இருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.
இளம்குடும்பப் பெண்ணொருவர் பிரசவத்திற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிசு உயிரிழந்த நிலையில் பிரசவமானது.
சிகிச்சையளிப்பதில் கவனக்குறைவாக இருந்ததால் மரணம் நிகழ்ந்ததாக சட்டவைத்திய அதிகாரி அறிக்கையிட்டிருந்தார்.
பிரசவ வலியை ஏற்படுத்த ஊசி செலுத்திய பின்னர் முறையாக கண்காணிக்கவில்லையென்றும், கர்ப்பப்பை பாதிப்படைந்து குழந்தைக்கு இரத்த ஓட்டமின்றி உயிரிழந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை பொலிசார் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டனர்.
நேற்று (17) இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மரணவிசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இன்று, பருத்தித்துறை வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர்கள் இருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.
பிரசவ விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தியோகத்தர்கள் நாளை நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.