சூடானின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு ஆபிரிக்காவின் ஒரு குட்டி நாடான சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதற்காக ஒரு நீண்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது அவ்வப்போது கலவரமாக வெடிப்பதும் பின்னர் கனன்று கொண்டிருப்பதாகவும் இருக்கிறது. சூடான் யுத்தம் இரு நாடுகளுக்கு இடையே அல்ல சொந்த மக்களுக்குள் நடக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடக்கிறது.
தற்போது இராணுவத்துக்கும், துணை இராணுவத்திற்கும் இடையே மோதல் ஆரம்பித்துள்ளது.
சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை இராணுவப் படையினர் திடீர் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
சூடானின் பிரதான துணை இராணுவக் குழு, ஜனாதிபதி மாளிகை, இராணுவத் தளபதியின் இல்லம் மற்றும் கார்டூம் சர்வதேச விமான நிலையத்தை ஒரு வெளிப்படையான சதி முயற்சியில் கைப்பற்றியதாகக் கூறியது
ஆனால் பிந்திய நிலவரப்படி, ஜனாதிபதி மாளிகை, இராணுவத் தலைமையகம் மற்றும் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டைஇராணுவம் மீட்டெடுத்துள்ளதாக சூடான் இராணுவத் தளபதி ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தெரிவித்துள்ளார். இரு தரப்பு தகவலையும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
இராணுவம் தங்களை முதலில் தாக்கியதாக குற்றம் சாட்டிய துணை இராணுவக் குழு, வடக்கு நகரமான Merowe மற்றும் மேற்கில் El-Obeid விமான நிலையங்களை தாங்கள் கைப்பற்றியதாகவும் கூறியது.
எந்தவொரு ‘பொறுப்பற்ற’ நடவடிக்கைகளுக்கும் இராணுவம் பதிலடி கொடுக்கும் என சூடான் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
சூடான் மருத்துவர்களின் மத்திய குழு ஒரு அறிக்கையில், நாட்டின் விமான நிலையத்தில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தில் மற்றொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறினார். இரண்டு பேர் விமான நிலையத்தில் எப்படி இறந்தார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி ஒமர் ஹசன் அல்-பஷீரின் விசுவாசிகsான இராணுவம் ஒரு சதியை நடத்தியதாகவும், ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சித்ததாகவும் துணை இராணுவப்படை குற்றம் சாட்டியது.
சூடான் விமானப்படையினர், துணை இராணுவப்படைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. விமானப்படை விமானங்கள் வானத்தில் வட்டமிடும் வீடியோவை மாத்திரம் இராணுவம் வெளியிட்டது.
கார்ட்டூமின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது மற்றும் அருகிலுள்ள நகரங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.
தலைநகரின் தெருக்களில் பீரங்கி மற்றும் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இராணுவம் மற்றும் துணைப்படை தலைமையகத்தின் அருகே கனரக ஆயுதங்கள் தாக்குதலில் ஈடுபட்டன.
சூடானின் அரசு தொலைக்காட்சியின் தலைமையகத்திலும் மோதல்கள் நடந்தன என்று திரையில் தோன்றிய ஒரு தொகுப்பாளர் சுருக்கமாக கூறினார்.
சர்வதேச சக்திகள் – அமெரிக்கா, ரஷ்யா, எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் – இவை அனைத்தும் போரை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளன.
துணைப்படையினர், பல நிலைகளில் தனது துருப்புகளைத் தாக்க முயன்றதாக இராணுவம் கூறியது. ஆனால், துணைப்படை அதை மறுத்தது. இராணுவமே தம்மை முதலில் தாக்கியதாக கூறியது. சூடானில் இராணுவத் துணைப்படையில் 100,000 பேர் அங்கம் வகிப்பதாக கூறப்படுகிறது.
ஹெமெட்டி என்று அழைக்கப்படும் முன்னாள் போராளிகளின் தலைவர் ஜெனரல் மொஹமட் ஹம்டன் டகாலோ தலைமையிலான இராணுவத் துணைப்படை, இராணுவம் தனது தளங்களில் ஒன்றைச் சுற்றி வளைத்து, கனரக ஆயுதங்களைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியது.
சூடானின் டார்பூர் பிராந்திய மோதலில் சூடான் அரசு சார்பபு போராளிக்குழுக்களில் இருந்து உருவாக்கப்பட்டதே இந்த இராணுவத் துணைப்படை. அந்த மோதலில் இவர்கள் கொடூரமாக போர்க்குற்றங்களை இழைத்தனர். தற்போது தணைப்படைக்கு தலைமைதாங்கும் ஹெமெட்டி, ஒரு காலத்தில் டார்பூரில் மிகவும் கொடூரமான மற்றும் இரக்கமற்ற அரச சார்பு போராளித் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
ஜூன் 2019 இல், துணைப்படையினர் தலைமையிலான பாதுகாப்புப் படைகள் சூடானின் ஜனநாயக சார்பு முகாமில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 130 பேர் இறந்தனர்.
ஹெமெட்டி 2019 முதல் இராணுவ ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தலைமையிலான ஆளும் இறையாண்மை கவுன்சிலின் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
இராணுவம் மற்றும் துணை இராணுவப்படை உடன் ஆரம்ப அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்ட சிவில் அரசியல் கட்சிகள் பகைமையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தன. ரஷ்ய தூதரகமும் வன்முறையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இராணுவத்திற்கும் துணை இராணுவத்துக்கும் இடையில் கடந்த சில நாட்களாகவே பதட்டம் நீடித்த நிலையில், இன்று மோதல் ஆரம்பித்துள்ளது. இது அதிகாரப் போராட்டங்கள் மற்றும் இராணுவ சதித்திட்டங்களுக்குப் பிறகு சூடானை சிவிலியன் ஆட்சிக்கு திரும்புவதற்கான நீண்டகால முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.
சூடானை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த பலம் வாய்ந்த ஜனாதிபதி ஒமர் அல்-பஷீருக்கு எதிராக, 2019இல் மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்ததை தொடர்ந்து இராணுவமும், துணை இராணுவமும் அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தன.
ஓகஸ்ட் 2019 உடன்படிக்கையின் கீழ், தேர்தலுக்கு முன்னதாக பொதுமக்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள இராணுவம் ஒப்புக்கொண்டது. 2021 ஒக்டோபரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பினால் அந்த ஏற்பாடு திடீரென நிறுத்தப்பட்டது, இது சூடான் முழுவதும் புதிய வெகுஜன ஜனநாயக சார்பு பேரணிகளைத் தூண்டியது.
சூடானில் 1956 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து இராணுவம் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருந்து வருகிறது.