இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை வழங்குவதற்கு இரணைமடு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில், கடந்த 2ஆம் திகதி கிளிநொச்சியில் அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் நடந்த கலந்துரையாடலில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சந்திக்கும் கலந்துரையாடலை, கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனே ஏற்பாடு செய்தார். எனினும், அவர் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரை வழங்குவது உணர்வுபூர்வமான விவகாரமாக மாறி வருவதால், யாழ்- கிளிநொச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்திருக்கக்கூடும்.
கடந்த 2ஆம் திகதி வடக்கிற்கு வந்த ஜீவன் தொண்டமானின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில், அவரது தரப்பினரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, “கிளிநொச்சியில் சிறிதரன் எம்.பியின் ஏற்பாட்டில் நடக்கும் கூட்டம்“ ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரை வழங்க முடியாது என்பது இரணைமடு விவசாயிகளின் நிலைப்பாடு. இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் சிவமோகன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர். கரைச்சி பிரதேசசபை உறுப்பினர். தற்போது வேட்பாளர். கடந்த 13 வருடங்களாக அவரே அந்த பொறுப்பில் இருக்கிறார். பொதுவாக இந்தவகையான அமைப்புக்களின் நிர்வாகங்கள் 2 வருடங்களுக்கு ஒருமுறை மாறும். ஆனால் இரணைமடுவில் எதிர்ப்பின்றி ஒருவரே பதவியில் தொடர்வது, அந்த அமைப்புக்குள் தமிழ் அரசு கட்சியினதும்- சிறிதரன் தரப்பினதும் செல்வாக்கு எவ்வளவு ஆழமானது என்பதை புலப்படுத்தும்.
இரணைமடு குள நீரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப மறுக்கும் இரணைமடு விவசாய அமைப்புக்களுக்குள் தமிழ் அரசு கட்சியின்- சி.சிறிதரனின் பிடி எவ்வளவு இறுக்கமானது என்பதை வாசகர்கள் புரிந்திருப்பீர்கள்.
அந்த தரப்பினர் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப மறுத்துள்ளனர்.
அதேவேளை, அந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.
முன்னர் ஒரு காலத்தில்தான் சி.சிறிதரனை கிளிநொச்சி ஜமீன்தார் என சொன்னார்கள். இப்போது அப்பிடியான நிலைமையில்லை. கிளிநொச்சிக்குள் பல அரசியல் தரப்புக்கள் தோன்றுகின்றன. வடக்கு கிழக்கில் ஏனைய பகுதிகளில் பல அரசியல் தரப்புக்கள் பலமடைந்ததை போல கிளிநொச்சியில் இல்லையென்றாலும், 5 வருடங்களின் முன்னர் இருந்த நிலைமை இப்பொழுதில்லை.
சிறிதரனிற்கு யாழ்ப்பாண வாக்குகளும் தேவை. அதேவேளை, இன்னும் சில மாதங்களில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையையும் அவர் ஏற்க பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த சில வருடங்களாகவே அவர் தனது அரசியல் அணுகுமுறைகளை மெருகேற்றி வருகிறார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்கும் தெரியாமல் வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால், இப்பொழுது அப்படி செயற்படுவதில்லை.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மோதலிற்குள் சிக்குவது தனது வாக்கு வங்கியை மட்டுமல்ல, தமிழ் அரசு கட்சி தலைமை கனவையும் சேதமாக்கும் என்பதால், அவர் அந்த கூட்டத்தை தவிர்த்திருக்கக்கூடும்.