டியர் பெண்ணிய புரோ, சில கேள்விகள்

Date:

-அபிலாஷ் சந்திரன்-

“எல்லா பெண்களும் குற்றவாளிகள்னு பொதுமைப்படுத்தாதீங்க புரோ. தனிப்பட்ட அனுபவங்களை வைத்து பொதுவா ஒரு அபிப்ராயத்துக்கு வராதீங்க.”

“சரி படுத்தல. ஆனா காலங்காலமா எல்லா ஆண்களும் ஆதிக்கவாதிகள், பெண்களை ஆண்கள் ஒடுக்குகிறார்கள்னு பெண்ணியவாதிகள் எழுதினப்போ எங்க போயிருந்தீங்க? அது தனிப்பட்ட அனுபவங்களினால் விளைந்த பார்வையில்லையா? ஏன் நீங்கள் எல்லா ஆண்களும் வன்முறையாளர்கள், கற்பழிப்பாளர்கள் என தொனிக்கும்படி கதைகள், கட்டுரைகள் எழுதும் போது அதன் உண்மைத்தன்மையை விசாரிக்கவில்லை?

ஒரு போலீஸ்காரன் அப்பாவியை பிடிச்சிட்டு போய் அடிக்கிறான். இன்னொருத்தன் தன்னிடம் சிக்கிக்கிட்டவன் பல்லைப் பிடுங்கிறான். அவன் ஆணில்லையா? அதை நீங்க என்னிக்காவது பொருட்படுத்தி இருக்கீங்களா? ஒரு பெண்ணோட பல்லை ஒரு போலீஸ்காரர் பிடுங்கி இருந்தால் அது இந்தியா முழுக்க செய்தி ஆகியிருக்குமே. நாடே பற்றி எரிந்திருக்காதா! ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணை காவல் துறையின் கஸ்டடி வதையின் பகுதியாக ஒடுக்கினால் அது இச்சமூகத்துக்கு ஒரு பொருட்டல்ல. வியப்புடன் பேசி கடந்து விடுவோம்.

உங்களுக்கு ஆணோட ஒடுக்குமுறை பொருட்டில்ல, ஆனா ஒரு பெண் மீது தூசு துரும்பு படக் கூடாதுங்கிற கவலையே பெரிது. வலி ரெண்டு பாலினத்துக்கும் ஒண்ணு தான் என்றாலும் ஆண் எவ்வளவு அடிபட்டு செத்தாலும் கவலையில்லை, சட்டத்துக்கும் நிர்வாகத்துக்கும் சமூகத்துக்கும் ஊடகங்களுக்கும். அண்மையில் ஒரு ஊடகவியலாளரான பெண், மணமான பெண், அதை மறைத்து ஒரு இளைஞரை திருமணம் செய்துகொண்டு வேறு சில ஆண்களுடனும் அதே நேரம் உறவில் இருந்திட, அதைப் பற்றி தெரிய வந்து அந்த இளைஞர் குரல் பதிவுகளை வெளியிட்டு விட்டு தற்கொலை பண்ணிக்கொண்டார். அவரது பெற்றோர் புகார் அளித்தும் காவல்துறை கண்டுகொள்ள வில்லை; கவிஞர் தாமரையின் முயற்சியால் புலனாய்வு இதழொன்றில் செய்தி வந்தது. ஆனால் பிற ஊடகங்களோ சமூகமோ கண்டுகொள்ளவில்லை. எனக்கு இதைப் பற்றி எந்த ஆச்சரியமும் இல்லை – தினமும் செய்தித்தாளில் ஏதாவது ஒரு கல்யாணமான ஆண் தற்கொலை பண்ணிக்கொண்ட செய்தி வருகிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

கேரளாவில் பய்ஜூ ராஜு என்பவர் தன் தற்கொலை தன் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் அம்மாவும் சகோதரரனும் அளித்த உளவில நெருக்கடியே காரணம் என காணொளி ஒன்று வெளியிட்டு விட்டு தற்கொலை பண்ணிக்கொண்டார். காவல்துறை அதை பொருட்படுத்தி விசாரணையை சரியாக முன்னெடுக்கவில்லை, யாரையும் கைதும் பண்ணவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த ஒருவர் தன் மனைவியின் உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல் தாங்காமல் காவல் நிலையத்துக்கு போய் தன் மனைவியிடம் இருந்து பாதுகாப்பு வேண்டினார். அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்க, தன்னால் வீட்டுக்குப் போக முடியாது, காவல் நிலையத்திலே தன்னை அன்றிரவு வைத்துக்கொள்ல வேண்டும் என வேண்டினார். காவலர்களோ அவரை கலாய்த்து விரட்டி விட்டார்கள். அன்றிரவு அவர் தன் வீட்டில் தூக்குமாட்டி இறந்தார். அதன் பிறகும் போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. (இதைப்பற்றி Martyrs of Marriage ஆவணப்படத்தில் உருக்கமான காட்சிகள் உண்டு.) கணவன் முறைத்துப் பார்த்தாலே குடும்ப வன்முறை பிரிவின் கீழ் கைது செய்யும் நாட்டில் மனைவியின் உளவியல் சித்திரவதை, நேரடியான உடல் தாக்குதல்களை எதிர்கொள்ளும் எத்தனையோ கணவர்கள் உண்டு. அவர்களுக்கு எந்த சட்டரீதியான பாதுகாப்பும் இல்லை.

நம் நீதித்துறையின் படி ஒரு பெண் ஒரு ஆணின் தற்கொலையை தாராளமாக தூண்டலாம், அட கொலை கூட பண்ணலாம், என் உயிரைக் காப்பாற்றுவதற்காக பண்ணினேன் என்று நியாயப்படுத்தி தப்பிக்க கூட முடியும், ஆனால் ஒரு மனைவி தற்கொலை பண்ணினாலோ அன்றைய தினமே எந்த விசாரணையும் பண்ணும் முன்பு கணவனை கைது பண்ணி விடுவார்கள். அதன் பிறகு அவர் தான் கொலை பண்ணவில்லை என்று நிரூபித்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் சிறைதான்.

போலீஸையும் குற்றம் சொல்ல முடியாது. தன் மகள் தனிப்பட்ட காரணத்துக்காக தற்கொலை பண்ணினால் கூட அவரது பெற்றோரும் உறவினரும் பெருங்கூட்டமாக வந்து காவல் நிலையத்தை முற்றுகையிடுவார்கள். ஆனால் தன் மகன் இறந்தால் எந்த பெற்றோரும் அதை விசாரிக்க வேண்டும் என கொந்தளிப்பதில்லை. ஒரு நாய் இறந்தால் எப்படி தூக்கிப் போட்டுவிட்டு வேலையைப் பார்ப்போமோ அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இதை நான் கற்பனையாக சொல்லவில்லை. செய்தித்தாளில் தினசரி வரும் செய்திகளைப் பார்த்தாலே நான் சொல்வது புரியும்.

இன்று மாறி வரும் சமூக பொருளாதார நிலையில் ஆண்களே கடும் உளவியல் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். பள்ளித் தேர்வில் ஆண்களின் தேர்வு சதவீதம் உலகம் முழுக்க வீழ்ச்சியடைந்து வருகிறது, கல்லூரிகளிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக சேர்கிறார்கள். வேலையிழப்பு, தடுமாற்றம், பயம், பதற்றம், அதிகமான போதைப் பழக்கம், சமூக வலைதளங்களில் ஆண்-பெண் உறவுகளில் இன்றுள்ள ஸ்திரமின்மை, திருமணத்திற்கு பின் ஆண் மீதுள்ள ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், ஆணுக்கு எதிரான பெண்ணுக்கு மட்டும் சாதகமான பாரபட்சமான சட்டம் மற்றும் சமூகம், உம்மென்றால் கைது இம்மென்றால் விவாகரத்து, மனைவி கள்ள உறவு வைத்திருந்தால் பழியை கணவன் மீது போட்டு அவன் மீது பொய் வழக்கு போட்டு அவனை அலைய விடுவது, செட்டில்மெண்ட் பணப்பறிப்பு, அவமானம், அதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாத நெருக்கடி என ஆணுக்கு மிக மோசமான காலகட்டம் இது.

ஏனென்றால் சமூகம், பொருளாதாரம், சட்டம் என எல்லாமே அவர்களை வேட்டையாடுகிறது. தன்னை ஒரு ஆணாக முன்வைப்பது குறித்து அவர்களுக்கு இன்று ஒரு கூச்சமும் தன்னிரக்கமும் ஏற்பட்டுவிட்டதால் அவர்கள் தம் ஆண்மையை துணிச்சலாக முதிர்ச்சியாக முன்வைப்பதில்லை. தம்மை வேடிக்கையான விளையாட்டான குழந்தைமை மாறாத சிறுவர்களாகவே நாற்பது வயதில் கூட காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். பெண்களோ இதை முதிர்ச்சியின்மையின், போதாமையின் வெளிப்பாடாக பார்க்க அவன் அவர்களுடைய மதிப்பீட்டில் வீழுகிறான். கணிசமான ஆண்கள் இன்று மீசை வைத்துக் கொள்வதில்லை அல்லது குறைத்துக் கொள்கிறார்கள். பெண்கள் தம் பெண்மையை மிகுதியாகவும் ஆண்கள் குறைவாகவும் காட்டிக் கொள்ளும் காலம் இது. இது அவர்களுடைய தன்னம்பிக்கையின் அளவை காட்டுகிறது – பெண்கள் தம்மை முழுமையாக விரும்பி நம்பி வெளிப்படுத்தும் வெற்றித்தாரகைகளாகவும் ஆண்கள் இரவில் மட்டும் பொந்தில் இருந்து வெளிவந்து பதுங்கி செல்லும் எலிகளைப் போல் ஆகி விட்டார்கள்.

உலகம் முழுக்க இன்று ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள், அதிகமாக தற்கொலை செய்கிறார்கள், கடும் உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்கள், ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டு ஊனமுறுகிறார்கள், பாதாள சாக்கடையில் இறங்கி வேலை செய்து விஷவாயுவை சுவாசித்து இறக்கிறார்கள், ஆனால் இந்த வகையான ஆபத்துகளில், கடும் உழைப்பில், துன்பமான பணிகளில் பெண்கள் இறங்கி சிரமப்படுவதோ உயிரையோ அங்கங்களையோ இழப்பதில்லை. அவர்கள் மென் உழைப்பில் மட்டுமே ஈடுபடுகிறார்கள். அவர்கள் பாதுகாப்பான அதிக ஊதியமுள்ள பணிகளில் இருக்கிறார்கள், அல்லது கணவன் சுரங்கங்களில் இறங்கி மூச்சு கிடைக்காமல் போராடி சம்பாதிக்க இப்பெண்களோ வீட்டில் உட்கார்ந்து ரொட்டி சுடுகிறார்கள்.

நீங்கள் கடுமையான மெட்ரோ ரயில் கட்டமைப்பு பணிகளிலோ இரவு முழுக்க தூக்கமில்லாமல் நிற்க வேண்டிய காவலாளி பணிகளிலும் பெண்களை பார்க்க முடியாது. பெண்களுக்கான வேலைகள் எல்லாம் பகல் நேரத்தில் வசதியான எளிய பணிகளாக அமைவதை கவனியுங்கள். பெண்களால் இரவில் வேலை செய்ய முடியாது என்றில்லை. அதிக சம்பளம் வந்தால் அவர்கள் பி.பி.ஓக்களில் இரவில் தாராளமாக பணி செய்வார்கள். ஆனால் குறைவான சம்பளம் என்றால் வசதியான வேலைகளையே எடுத்துக்கொள்வார்கள். அலைந்து திரியும் எந்த வேலைகளிலும் பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை கவனியுங்கள்.

என்னதான் ஆட்டோ ஓட்டுநராக, ஸ்விக்கி டெலிவரி பணியாளர்களாக சில பெண்கள் வந்தாலும் பெரும்பாலான பெண்கள் அம்மாதிரியான பணிகளை விரும்புவதில்லை. கொரோனா நாடடங்கின் போது ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே போன புலம்பெயர் தொழிலாளர்கள் ஆண்களா பெண்களா? ஆண்களே. பெண்கள் “ஏங்க எப்போ வீட்டுக்கு வருவீங்க?” என போனில் கேட்டு வீட்டில் உட்கார்ந்து தின்று கொண்டிருந்தார்கள். அதிகமாக வெளியே சென்று வேலை செய்து நோய்த்தொற்று ஏற்பட்டு அதிகமாக செத்துப் போனவர்களும் ஆண்களே பெண்கள் அல்ல. புள்ளிவிபரப்படி மூன்று அலைகளிலும் 94,030 ஆண்களும் 47827 பெண்களும் இறந்தார்கள். இதனாலே பெண்கள் குறைவான அழுத்தத்துக்கும் நெருக்கடிக்கும் ஆளாகிறார்கள், ஆண்களை விட நீண்ட ஆயுள் வாழ்கிறார்கள். இதைப் பற்றி ஆய்வு செய்யும் முற்போக்காளர்களோ இப்பெண்கள் வீட்டுக்குள் முடங்கி ஒடுக்கப்படுவதாக, நிரந்தர விக்டிம்கள் என்று சித்தரிப்பர்.

200இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிபரப்படி பலாத்காரம் செய்யப்படும் ஆண் குழந்தைகளின் சதவீதம் (57.30) பெண் குழந்தைகளை (52.94) விட அதிகம். ஆனால் பாதிக்கப்படும் ஆண் குழந்தைகளைப் பற்றி யாரும் பேசுவதோ இக்குழந்தைகளை சுரண்டியவர்கள்ன் மீது நடவடிக்கை எடுப்பதோ இல்லை. பெண் குழந்தையை பலாத்காரம் செய்பவர்கள் மீதோ உடனுக்குடன் போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது (அந்த ரேப்பிஸ்ட் அக்குழந்தையின் மாமாவாகவோ தாத்தாவாகவோ இல்லாத பட்சத்தில்). ஏனென்றால் தமது ஆண் குழந்தைகள் பலாத்காரம் பண்ணப்பட்டால் அதை பெற்றோர் பொருட்படுத்துவதே இல்லை. ஆண் குழந்தைகள் பாதுகாக்கப்படாததால் அவர்கள் ஒரு சுலபமான இரையாகிறார்கள். நிறைய ஆண்கள் தமது மோசமான அனுபவங்களை பல வருடங்களாக சகித்துக்கொண்டு ஒரு காயமாக சுமந்து கொண்டு வாழ்நாள் முழுக்க துன்புறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் இப்படி பலவிதங்களில் ஆண் குழந்தைகளும் ஆண்களும் சுரண்டப்படுவதற்கு, வதைக்கப்படுவதற்கு, தற்கொலைக்கு விரட்டப்படுவதற்கு காரணம் அவர்கள் மீது சமூகமும் சட்டமும் எந்த அக்கறையும் கட்டாததே.

ஆணுடலானது நம் சமூகத்தில் சாலையில் வீசப்படும் குப்பையைப் போன்றே மதிப்பிடப்படுகிறது. ஆண் குழந்தைகள் பிறந்தால் மகிழும் பெற்றோர் அதே ஆண் குழந்தையை தம் பெண் குழந்தைக்கு இணையாக ஆர்வம் செலுத்தி வளர்ப்பதே இல்லை. ஆண் குழந்தையின் உடல் மீது பழைய நிலப்பிரபுத்துவ சமூகத்தில் உற்பத்தி சார்ந்து ஒரு குறைந்தபட்ச மதிப்பிருந்தது; ஆனால் இன்று அத்தேவை இல்லை. நவதாராளவாத முதலீட்டியம் பெண்களையே தமது பிரதானமான வாடிக்கையாளர்களாக, இலக்காக கருதுவதால் தனியாரிலும் அரசாங்கத்திலும் பெண்களை நேரடியாக முன்னெடுக்கும் சட்டங்களே அதிகமாக உள்ளன. ஆண்கள் சார்பான எந்த செய்திதையும் ஊடகங்களில் வெளியிடக் கூடாதென விதிமுறைகள் கார்ப்பரேட் ஊடகங்களில் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளன. மென்திறன்களின் யுகமான இன்று ஆண் குழந்தையை விட பெண் குழந்தையே பொருத்தமாக இருக்கிறது. அதனாலே ஆண் குழந்தையை பெரிய அக்கறை இல்லாமல் வளர்க்கிறார்களோ எனத் தோன்றுகிறது. வருங்காலத்தில் பெற்றோர் ஆண் குழந்தைக்குப் பதில் பெண் குழந்தையைப் பெறவே அதிகமாக விரும்பினால், ஆண் குழந்தைகள் சமூக அனாதகளானால் வியப்பில்லை.

இப்படி முழுக்க முழுக்க ஆண்களுக்கு விரோதமான காலத்தில் நாம் வாழும் போது இதை சற்றும் கவனப்படுத்தாமல் ஒரு பெரிய கும்பல் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஆண்கள் ஆணாதிக்கவாதிகள், சுரண்டலாதிக்கவாதிகள், வன்முறையாளர்கள், கற்பழிப்பாளர்கள், கொடூரமானவர்கள் என்று திரும்பத் திரும்ப பேசிக்கொண்டே பெண்கள் அப்பாவிகள், பாதிக்கப்பட்டவர்கள், அனாதரவானவர்கள் என உண்மையை தலைகீழாக திருப்பி சொல்கிறார்கள். நான் பெண்களை குற்றவாளிகள்னு பொதுமைப்படுத்தவில்லை, இந்த பாகுபாட்டை தான் கவனப்படுத்த முயல்கிறேன்.

(தொடரும்)

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்