இலங்கை ரக்பி நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி முன்னாள் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, இலங்கை ரக்பி நிறுவனம் மற்றும் அதன் தலைவர் ரிஸ்லி எலியாஸ் ஆகியோரால் உரிய தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தலை வழங்கினார்.
அதன்படி, இந்த மனு தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கும் வகையில், மனுவை இம்மாதம் 6ஆம் திகதிக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கை ரக்பி நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அப்போதைய விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணாக வெளியிடப்பட்டதாகவும் அதனை செல்லுபடியற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.