அமெரிக்கா, கனடா நாடுகள் 8,891 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற சுமார் ஒரு லட்சம் பேர் பிடிபட்டுள்ளனர். இந்த சூழலில் கடந்த 27ஆம் திகதி கனடாவின் கியூபெக் பகுதியில் இருந்து அமெரிக்காவின் மோஹாவ்க் பகுதிக்கு 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்தனர்.
அவர்கள் செயின்ட் லாரன்ஸ் ஆற்றில் படகில் அமெரிக்க கரையை நோக்கி சென்றனர். அப்போது கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் படகு கவிழ்ந்து 8 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். கடந்த சில நாட்களில் 8 பேரின் உடல்களையும் அமெரிக்காவின் மோஹாவ்க் பகுதி போலீஸார் அடுத்தடுத்து மீட்டனர்.
இதுகுறித்து மோஹாவ்க் போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “படகு விபத்தில் ருமேனியாவம்சாவளி குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் குஜராத் மாநிலம், மெஹ்சனா பகுதியை சேர்ந்த பிரவீண்பாய் சவுத்ரி (50), அவரது மனைவி தக்சாபென் (45), மகள் வித்கிபென் (23), மகன் மிதுகுமார்(20) ஆகியோரும் படகு விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளோம்’’ என்றனர்.
குஜராத்தில் வசிக்கும் பிரவீண்பாய் சவுத்ரியின் தம்பி ஜேசுபாய் சவுத்ரி கூறும்போது, “கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் எனது அண்ணன் குடும்பத்தினர் கனடாவுக்கு சென்றனர். கனடாவில் வசிக்கும் சவுத்ரி சமுதாய மக்களும் எனது அண்ணன் குடும்பத்தினர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.