கரைத்துறைப்பற்று பிரதேசசபை தேர்தலில் தராசு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு என்ற முஸ்லிம் காங்கிரசின் பின்னணியுடைய கட்சி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியென்பது தனக்கு தெரியாது, அது சுயேச்சைக்குழுவென்றே தான் நினைத்திருந்ததாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சியும், முஸ்லிம்களின் கட்சியான ஜனநாயக தேசிய கூட்டமைப்பும் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை எம்.ஏ.சுமந்திரனே மேற்கொண்டார்.
ஜனநாயக தேசிய கூட்டமைப்பு என்ற கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 19ஆம் திகதி இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடந்த போது, இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்தது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன் போன்றவர்கள் இந்த விவகாரம் தமக்கு முழுமையாக தெரிந்திருக்கவில்லையென்றனர். அது ஒரு சுயேட்சைக்குழுவென்றே தாம் நினைத்திருந்ததாக தெரிவித்தனர்.
“அது ஒரு சுயேச்சைக்குழுவென்றுதான் நான் நினைத்திருந்தேன். அப்படித்தானே எனக்கு சொன்னீர்கள்?“ என மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரனை பார்த்து கேட்டார்.
“நானும் அது சுயேச்சைக்குழுவென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்“ என எம்.ஏ.சுமந்திரன் கூறினார். மண்டபத்தில் இருந்த அத்தனை பேரும் பெரிதாக சிரித்தனர்.
கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்கான கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்தாகுவதற்காக முன்னர் மன்னார் நகரசபையில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, அவர்களிற்காக நீதிமன்றம் சென்ற சென்ற சட்டத்தரணியும் சுமந்திரன் தான்.