உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து அனுப்பப்படுவதாக குறிப்பிட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த கடிதத்தில் தமிழர்களிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலான தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரதான தென்னிலங்கை எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியனவுடன், பிரதான முஸ்லிம் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன அனுப்பி வைத்துள்ள இந்த கடிதத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரிடமும் கையொப்பம் பெறப்படவில்லை. அந்த கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மாத்திரமே கையொப்பம் பெறப்பட்டிருந்தது. அந்த கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் கையொப்பம் பெறப்பட்டிருக்கவில்லை.
இதுதவிர, எதிர்க்கட்சி வரிசையிலுள்ள தமிழ் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிவற்றுடனும் கடிதம் தொடர்பில் பேசப்பட்டிருக்கவில்லை. இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட, மேற்படி 3 கட்சிகளில் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சியில் உள்ள போதே ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஒரு நடவடிக்கையில் தமிழ் மக்களின் கட்சிகளிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாத பட்சத்தில், ஆட்சிக்கு வந்தால் எவ்வாறான நிலைமையிருக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதேவேளை, இந்த கடிதத்தில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி தரப்பிலுள்ள பிரதான கட்டிசியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கையொப்பமிட்டுள்ளார்.