“இலங்கை உணவுகளை என்னால் சாப்பிட முடியாது. என்னால் இந்த நாட்டில் இருக்க முடியாது. நான் என் நாட்டிற்கு செல்ல விரும்புகிறேன். நீ என்னை போக விடவில்லையென்றால் உன்னை ஒரு நாள் கொன்று விடுவேன்.” என வர்த்தகர் ஒனேஷுடன் மனைவி ரோசா சண்டையிடுவதாக அவர்களது வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கூறியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் உண்மைகளை அறிக்கையிட்டுள்ளது.
ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் இயக்குனர் நாற்பத்தைந்து வயதுடைய ஒனேஷ் சுபசிங்க ஜனவரி 05 அன்று இந்தோனேசியாவில்.கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது பி அறிக்கையில் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்கவின் சகோதரரான சுபாஷ் சுபசிங்கவின் முறைப்பாட்டின் பிரகாரம், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் ஐந்து ஊழியர்களிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் உண்மைகளைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, புகார்தாரர் சுபாஷ் சுபசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அவரது சகோதரர் ஒனேஷ் சுபசிங்க, பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரொசாலியா நஸ்கிமோன்டோ கார்டோசோ டி சில்வா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு அலிஷா சுபசிங்க என்ற நான்கு வயது மகள் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பித்துள்ளது.
மகள் பொரளை – அல்விட்டிகல மாவத்தையில் உள்ள பிரித்தானிய சர்வதேச பாடசாலையில் கல்வி கற்று வருவதாகவும் அவரது சகோதரர் கொழும்பு ரொஸ்மீட் பிளேஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருவதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இறந்தவரின் சகோதரியின் கணவர் ஷியாம் லால் அரவிந்த அளித்த வாக்குமூலத்தில், “ஒனேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், ஒனேஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
இறந்தவரின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணான தேவதாச மேகலா காந்தி தனது வாக்குமூலத்தில், மனைவி ரோசா, ஒனேஷுடன் எப்போதும் சண்டையிடுவதாகத் தெரிவித்துள்ளார், “என்னால் இலங்கை உணவைச் சாப்பிட முடியாது. இலங்கையில் இருக்க முடியாது. நான் என் நாட்டிற்கு செல்ல விரும்புகிறேன். என்னை போக விடவில்லையென்றால் என்றாவது ஒரு நாள் உன்னை கொன்று விடுவேன்“ என ஆங்கிலத்தில் திட்டியதாக தெரிவித்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
“ஒரு நாள் மனைவி தன்னைக் கொன்றுவிடுவாளோ என்று ஒனேஷ் பயந்தார்.
அதன் காரணமாக, ஒரு நாள், ஒனேஷ் என்னையும், வீட்டின் மற்றொரு பணிப்பெண் பிரியங்கனியையும் அறைக்கு அழைத்தார். ரோசா பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு பிரேசில் செல்லக்கூடும். அதனால் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்“ என ஒனேஷ் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வீட்டுப் பணிப்பெண்ணான தேவகே புஷ்பராணியும் வாக்குமூலம் அளித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பித்தார், அந்தத் தம்பதியரின் குழந்தையைப் பராமரித்தது தானே என்றும், குழந்தைக்கு சுமார் ஒரு வயது ஆன பிறகு, அந்தப் பெண்மணியும் கணவரும் அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தார்கள் என தெரிவித்துள்ளார்.
அவர் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரியும் போது, ஒரு நாள் ஒனேஷைக் கொன்றுவிடுவேன் என்று ரோசா கூறியதைக் கேட்டதாகவும், இருவரும் எப்போதும் சண்டையிட்டுக் கொள்வதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.
இந்தக் கொலைக்கான சதித்திட்டம் இலங்கைக்குள் தீட்டப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை குற்றவியல் சட்டத்தின் 113 மற்றும் 296ஆவது பிரிவின் பிரகாரம் 32ஆவது பிரிவின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. .
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.