உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரச அச்சக அலுவலக தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
நேற்று (13) பிற்பகல் அரச அச்சக உத்தியோகத்தர் திருமதி கங்கானி கல்பனா லியனகே, உரிய தொகை செலுத்தப்படும் வரை வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட மாட்டாது என எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, தேர்தல் ஆணைக்குழு உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அடிப்படை அச்சடிக்கும் பணிக்காக, திறைசேரியில் இருந்து, அரசு அச்சகத்திற்கு, நான்கு கோடி ரூபாய் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தேர்தல் ஆணைக்குழு ஒரு கோடியே எண்பது இலட்சம் ரூபாயை அரசு அச்சகத்திற்கு வழங்கியுள்ளது என்றார்.
வழக்கமாக அரசு அச்சகத்திற்கு தேர்தல் ஆணைக்குழு நிதி ஒதுக்கீடு செய்து, வாக்குச்சீட்டு அச்சடிக்கப்படும். அதன்பிறகுதான் திறைசேரியில் இருந்து அச்சக கூட்டுத்தாபனம் பணம் பெறும் என்று அந்த அதிகாரி கூறினார்.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்ட பிறகு அரசு அச்சகத்துக்கு பணம் வழங்கப்படுவது வழக்கம் என்று தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, வாக்குச் சீட்டு அச்சிடுவது தொடர்பில் அரசாங்க அச்சக ஊழியர் சங்கங்களுக்கு இடையில் ஒருவித இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில சங்கங்கள் வாக்குச் சீட்டு அச்சடிக்க வேண்டும் என்றும், வேறு சில சங்கங்கள் பணம் கொடுக்கும் வரை அச்சடிக்கக் கூடாது என்றும் கூறுகின்றன.




