13வது திருத்தத்தை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்த பின்னரே தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மங்கராமய, கெவிலியமடுவ அபிநவராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று (13) அதிகாலை தன் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறும் சம்பவமும், இதன் தொடர்ச்சியென்றே குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுக் காலை இனந்தெரியாத ஆயுதக் குழுவொன்று விகாரைக்குள் புகுந்து தான் உறங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், மயிரிழையில் தான் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சுமணரதன தேரர் படுத்திருந்த அறையை நோக்கி 03 துப்பாக்கிச் சூட்டுகள் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத சிலர் சுமனரதன தேரரின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து கொலைமிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
13வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தை நிறுத்துமாறு கூறி தன்னை அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அம்பாறை மற்றும் மங்களகம பொலிஸ் நிலையங்கள் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. உத்தியோகபூர்வ பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிய பகுதிகளை அடையாளம் காண முடியவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் சுமனரதன தேரர் தெரிவிக்கையில்,
நான் 30 வருடங்களாக மட்டக்களப்பு மங்களாராம விகாரையில் இருந்தேன், உக்கிரமான வடக்கு கிழக்கு யுத்தத்தின் போது புலிகள் இயக்கத்தினர் கிராமங்களுக்கு வெளியே சண்டையிட்ட போதும் இங்கு தங்கியிருந்தேன்.
ஆனால் என் விகாரையை ஒரு தோட்டா கூட தாக்கவில்லை. 13வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை தாங்கச் சென்ற நாள் முதல், தொலைபேசியில் தொடர்ச்சியாக எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன.
நான் அந்த மிரட்டல்களுக்கு செவிசாய்ப்பவன் அல்ல. மிக மோசமான போர்களின் போதும் மட்டக்களப்பில் அப்பாவி மக்களுடன் இருந்தேன். நேற்று காலை, விகாரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. என் அறையில் ஒரு பக்கத்தில் கண்ணாடி ஜன்னல் உள்ளது. அந்த ஜன்னல் வழியே பாய்ந்த தோட்டாக்கள் நான் உறங்கிக் கொண்டிருந்த கட்டிலின் மேல் சுவரை தாக்கின. இன்னும் சற்று கீழிறங்கியிருந்தால் என் தலையை தாக்கியிருக்கும். சில நிமிடங்களில் துப்பாக்கியால் சுட்டவர்கள் ஓடிவிட்டனர். பின்னர் இது தொடர்பில் நான் பொலிஸாருக்கு அறிவித்தேன்.
மட்டக்களப்பில் உள்ள இந்த தொலைதூர கிராமத்தில் மக்களை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவே நான் கெவிலியமடு விகாரையில் தங்கியிருக்கிறேன். இந்தப் பண்ணையை நடத்த இரண்டு குளங்களை உருவாக்கினேன். பண்ணையில் 10-12 பேர் வேலை செய்கிறார்கள். நேற்று இரவு 10 மணியளவில் நான் தூங்கச் சென்றேன். அரைத்தூக்கத்தில் இருந்த போது 03 துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது.
30 ஆண்டுகளாக என்னைக் கொல்ல முயன்றனர். கெவிலியமடுவ அபிநவரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு இருந்த போதிலும் நான் பாதுகாப்பாக இல்லை. 13வது அரசியலமைப்புத் திருத்தச் செயற்பாட்டிற்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் எனக்கு அதிகளவான மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. “உன்னைக் கொன்றுவிடுவோம் என்று சுமனரத்ன“ என தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டினர்.
எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் எனக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை“ என்றார்.