குளியாபிட்டிய நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதியின் உத்தியோகபூர்வ காரை கொள்ளையடித்த சந்தேகநபர் வத்தளை ஒலிமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
திருடப்பட்ட காரும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தங்கியிருந்த ஹோமாகம உடுவான பகுதியில் உள்ள வீட்டை சோதனையிட்ட போது, சந்தேகநபர் கொள்ளைச் சம்பவங்களுக்கு பயன்படுத்திய இரண்டு போலி கைத்துப்பாக்கிகள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நான்கு கத்திகள், ஒரு போத்தல் விசம், மிளகாய் பொடி அடங்கிய பையையும் பொலிசார் கைப்பற்றினர்.
காரை ஒப்படைப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் கேட்டு நீதவானிடம் சந்தேகநபர் விடுத்த அழைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீதவானின் சகோதரன் என சந்தேக நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பொலிஸ் அதிகாரியொருவர், அவசரநிலை காரணமாக நீதவான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், கப்பம் தேவையென்றால் தன்னுடன் பேசுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் சந்தேக நபரை சம்மதிக்க வைத்து வத்தளைக்கு அழைத்து வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒலியமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல நிறுவனமொன்றுக்கு அருகில் உள்ள கடையின் பெயiர குறிப்பிட்டு, அங்கு பணத்துடன் நிற்பதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டதை நம்பிய சந்தேகநபர், அங்கு பணம் பெற வந்தபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நீதவானின் காரும் கைப்பற்றப்பட்டது.
கடந்த சனிக்கிழமை நீதவானின் கார் கொள்ளையிடப்பட்டிருந்தது. பிலியந்தலை, மடபாத பகுதியில் உள்ள அவரது சொகுசு வீட்டை வாடகைக்கு விடுவதாக நீதவான் சொத்து இணையத்தளத்தில் விளம்பரம் செய்ததையடுத்து, சந்தேகநபர் வீட்டை பார்க்க வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
கீழ் மாடியை பார்த்து விட்டு, மேல் மாடியை பார்த்துக் கொண்டிருந்த போது, நீதவானை மேல் மாடி பால்கனியில் வைத்து பூட்டி விட்டு, கீழே இறங்கி வந்து, காரை திருடிக் கொண்டு தப்பிச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




