துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்ட அந்த நாளின் பிற்பகலில், சிரியாவின் வடமேற்கில் உள்ள அஃப்ரினில் உள்ள ஜெஹான் மருத்துவமனையில், மருத்துவர் ஹானி மரூஃப் (43) கடமைக்கு சென்றார். தனது மனைவியும் ஏழு குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து கொண்டு தனது கடமைகளுக்குத் திரும்பினார்.
பிற்பகல் 3 மணியளவில், ஒரு ஆணும் பெண்ணும் ஓடி வந்தனர். அந்த ஆண் ஒரு சிறிய மூட்டையை கையில் வைத்திருந்தார். பேச முடியாமல் பதட்டமாக இருந்த அவர்கள், தங்களுக்கு ஒரு குழந்தை மருத்துவர் தேவை என்று கத்தினார். அவர்களின் முகங்களில் விரக்தியும், பீதியும் தென்பட்டது.
கையிலிருந்த விலைமதிப்பற்ற மூட்டையுடன். அவர்கள் உதவிகோரி ஓடிச்சென்ற ஆறாவது மருத்துவமனை அது.
அவர்களின் கையிலிருந்த துணி மூட்டைக்குள்ளிருந்தது ஒரு கைக்குழந்தை.
இன்று இடிபாடுகளில் ஒரு அதிசயம் (A miracle in the rubble) என உலகம் முழுவதும் கொண்டாlப்படும் அயாதான் அந்த குழந்தை.
கட்டிட இடிபாடுகளில் இறந்துபோன ஒரு தாய்க்கு பிறந்த குழந்தை அது. தாய் இறக்கும் தறுவாயில் அந்த குழந்தையை, கட்டிட இடிபாடுகளிற்குள்ளேயே இந்த குழந்தையை பிரசவித்தார்.
இதனால்தான் அந்த குழந்தையை மருத்துவ அதிசயம் என்கிறார்கள். அயா என்ற அரபுச் சொல்லிற்கு அற்புதம் என்று பொருள்.
பதறியடிபடி ஓடி வந்த தம்பதியிடம், தான் ஒரு குழந்தை மருத்துவர் என்று உறுதியளித்த மரூஃப் அவர்களிடமிருந்து குழந்தையை மெதுவாக எடுத்தார். அப்போது அவர் கண்டது அவரை நடுங்க வைத்தது. அந்த கணம் மிகப் பயங்கரமாக இருந்ததாக பின்னர் அவர் தெரிவித்தார்.
“அவள் உயிருடன் இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. அவள் வெளிர், குளிர், அமைதியாக இருந்தாள். அவளுடைய கைகால்கள் நீலமாக இருந்தன, அவளுடைய உடலில் பல காயங்கள் காணப்பட்டன” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
பின்னர் குழந்தையில் ஒரு பலவீனமான துடிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துடிப்புத்தான் மருத்துவர் ஹானி மரூஃப் மற்றும் அவரது குழுவிற்கு உயிரூட்டியது. உடனடியாக செயற்பட தொடங்கியவர்கள், குழந்தையை சூடேற்றப்பட்ட போர்வைகளால் போர்த்தி, ஒரு இன்குபேட்டரில் வைத்தனர். குழந்தைக்கு கல்சியம் மற்றும் குளுக்கோஸ் கரைசல்களை செலுத்த ஒரு நரம்பை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு குழந்தையின் உடல் சூடாக வேண்டும்.
சிறிது நேரத்திலேயே குழந்தை நன்றாக இருக்கிறது என மருத்துவர்கள் கருதுமளவிற்கு நிலைமை மேம்பட்டது.
அந்த குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடி வந்தவர், குழந்தையின் தாயின் சகோதரியின் கணவன். குழந்தையின் அயல்வீட்டு பெண்ணும் துணையாக ஓடி வந்தார். குழந்தை உயிர்தப்பியது அவர்களிற்கு ஆறுதலை கொடுத்தாலும், அவர்கள் மகிழ்ச்சியடையும் தருணமல்ல அது. அத்துடன், குழந்தையுடன் தங்கவும் முடியாது.
காரணம், அவர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை தேடிச் செல்ல வேண்டும். உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை புதைக்க வேண்டும்.
அந்த குழந்தைக்கு மருத்துவமனை ஊழியர்கள் அயா என பெயரிட்டனர். இன்று, துருக்கி, சிரியா நிலநடுக்க செய்திகளை பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் அயாவை தெரியும்.
அயா இப்போதும் இன்குபேட்டரில்தான் வைக்கப்பட்டுள்ளாள். அயாவிற்கு ஒரு நாளில் பலமுறை தன்னார்வலர்களால் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. மனித தாய்ப்பாலில் மட்டுமே காணக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மூலம் அந்த குழந்தைக்கு தேவையான நோயெதிர்ப்பு கூறுகளை பெறவும், குழந்தை விரைவில் நலமடையவும் உதவும்.
அயா செழித்து வளர்ந்திருக்கிறாள், எடை அதிகரிக்கிறாள், எல்லா நேர்மறையான குறிகாட்டிகளையும் காட்டுகிறாள், எல்லாவற்றிலும் அவன் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுகிறாள் என மரூஃப் பெருமிதத்துடன் கூறுகிறார்.
அயாவின் தாய்க்கு இது பிரசவ நாட்களல்ல. ஆனாலும், அதிர்ச்சியின் காரணமாக ஒரு பெண் பிரசவிப்பது மிகவும் சாத்தியம் என்று மரூஃப் கூறுகிறார்.
அயாவின் பெற்றோரும், 4 குழந்தைகளும் கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்கி உயிரிழந்து விட்டனர்.
திங்கட்கிழமை மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் இருந்த குழந்தை அயாவின் அழுகையைக் கேட்டதும், சில மணி நேரங்களுக்குள் இடிபாடுகளை அகற்றி குழந்தையை மீட்டனர்.
அந்த பகுதியில் கடுமையான குளிர்கால நிலைக்குள் அயா தப்பிப்பிழைத்தது ஒரு அதிசயம்தான்.
அயாவின் உறவினர்கள் அங்கு வந்தபோது, குழந்தையை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், தொலைந்த மற்றைய குடும்ப உறுப்பினர்களை தேடிக் கண்டுபிடியுங்கள் என மருத்துவர் மரூஃப் உறுதியளித்துள்ளார்.
குழந்தையின் அத்தையின் கணவர் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து பார்த்து செல்கிறார். ஆனால் இன்னும் குழந்தையை அழைத்துச் செல்ல குடும்பம் தயாராகவில்லை.
குழந்தை எவ்வளவு காலம் மருத்துவமனையில் இருந்தாலும், பராமரிக்க தயாராக இருப்பதாக ஜெஹான் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, குழந்தை அயாவை தத்தெடுக்க விரும்புவதாக தினமும் 100 இற்கும் அதிக தொலைபேசி அழைப்புக்கள் வருவதாகவும், ஆயிரத்திற்கும் அதிக கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் யாருடையை கோரிக்கையையும் ஏற்கவில்லையென்றும், குழந்தையின் உறவினர்களே அது பற்றிய முடிவை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர்.
சிரியாவில் கடந்த 12 வருடங்களாக தொடரும் உள்நாட்டு போரில், வடமேற்குப் பகுதியை ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்துக்கு எதிரான படைகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இது பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் அந்த பகுதிக்கு ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட நில எல்லைக் கடப்பு மட்டுமே துருக்கி வழியாக உள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்.
துருக்கியில் நிலநடுக்கத்தால் வீதிகள் பாதிக்கப்பட்டதால், முதல் 3 நாட்களிற்கு சிரியாவின் வடமேற்கு பகுதிக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் வியாழன் அன்று வாகனத் தொடரணிகள் மீண்டும் வரத் தொடங்கின. எவ்வாறாயினும், தேவைகள் மகத்தானதாகவே உள்ளன, வெள்ளிக்கிழமை உலக உணவுத் திட்டம் வடமேற்கு சிரியாவில் கையிருப்பு தீர்ந்துபோய், மேலும் உதவிகள் அனுப்பப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.