இலங்கையின் 75வது சுதந்திரதினத்திலன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஒரு போராட்டம் நடத்தியிருந்தது. அந்த போராட்டம் மக்கள் மத்தியில், போராட்டத்திற்குரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ, சமூக ஊடகவாசிகளிற்கு நல்ல பொழுதுபோக்கு அம்சங்களை கொடுத்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.
பாடசாலை கால மாறுவேட போட்டிகள் போல, திடீர் திடீரென ஒவ்வொரு தினுசான கோலத்தில் போராட்டம் நடத்துவதை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அணியினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த கோலங்களே, மக்கள் மத்தியில் போராட்ட உணர்வுகளிற்கு அப்பால் பொழுதுபோக்கு உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. மட்டக்களப்பிலும் அப்படித்தான் நடந்தது.
போராட்டத்தின் போது எல்லோருக்கும் வெள்ளைக் குல்லா வழங்கப்பட்டிருந்தது. அந்த ஐடியா எம்.ஏ.சுமந்திரனுடையது. பணம் செலவிட்டு குல்லா தயாரித்தவர் சாணக்கியன்.
இந்த குல்லாப் போராட்டம் ஏன் நடந்தது என்பதை தமிழ் அரசு கட்சியினர் சொல்லி விட்டனர். குல்லா ஏன் அணிந்தார்கள் என்பதை சொல்லவில்லை.
அவர்கள் சொல்லாவிட்டாலும், அதன் பின்னணி என்னவென தேடிய போது, சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
முதலாவது, அந்த குல்லாவை அணிந்தவர்களில் ஓரிருவரை தவிர, மிகுதி யாருக்குமே ஏன் அந்த குல்லா அணிந்தோம் என்பது தெரியாது. வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க வெள்ளைக்குல்லா தந்திருக்கக்கூடும் என, மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி இளைஞர் அணி முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் கூறினார்.
பிரதேசசபை தவிசாளர் ஒருவர் கருத்து தெரிவித்த போது, வெள்ளைக்குல்லா சுமந்திரனின் ஐடியா. எமக்கு அது சரியாக தெரியவில்லையென்றார்.
அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பலரிடம் பேசிய போதும், சரியான பதில் கிடைக்கவில்லை. நேதாஜி இப்படியொரு தொப்பி அணிந்தவர் அல்லவா, அவர் வழியில் பயணிக்க தமிழ் அரசு கட்சி முடிவெடுத்துள்ளது என பலர் சொன்னார்கள்.
இன்னும் சிலரோ, “நேருஜியா, நேதாஜியா என தெரியவில்லையே… இப்படியான பேர் வழியுள்ள யாரோ ஒருவர் இந்தியாவில் இப்படி தொப்பி அணிந்தாராமே… அதுதான் அணிந்தோம்“ என்றனர்.
இந்திய சுதந்திர போராட்டகாலகட்டத்தில் காந்தி அகிம்சை வழியில் போராடிய போது, நேதாஜி ஆயுத வழிமுறையில் நம்பிக்கை கொண்டு செயற்பட்டிருந்தவர். அவர் அணிந்திருந்த தொப்பியில் இரண்டு நட்சத்திரங்கள் இருக்கும். தமிழரசுக்காரர்களின் குல்லாவில் 3 நட்சத்திரங்கள் இருந்தன. ஆர்வமிகுதியில் ஒரு நட்சத்திரத்தை எக்ஸ்ட்ராவாக அடித்து விட்டாலும், இவர்கள் நேதாஜியின் ஆட்களாக இருக்கப் போகிறார்களோ என்ற சந்தேகம் இருந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சி ஆரம்பம் தொடக்கம் காந்திய வழியை தொடர்வதாக கூறியபடி, இளைஞர்களை உசுப்பேற்றி கொலைகளை ஆரம்பித்தவர்கள் என்பது வரலாறு. இனப்பிரச்சினை கொதிநிலைக்கு வர ஆரம்பித்த தருணங்களில், துரையப்பாவிற்கு இயற்கையான மரணம் நிகழாது என மேடை மேடையான இலங்கை தமிழ் அரசு, தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் முழங்கினார்கள். துரோகிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றார்கள்.
தீவிர எண்ணமுடைய இளைஞர்களிடம் இந்த கருத்துக்களை விதைத்தனர். விளைவு துரையப்பா சுடப்பட்டார். தமிழரசு, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்காக எந்த மட்டத்திலும் தேர்தல் நாடகம் ஆடுவார்கள் என்பதை போராளி அமைப்புக்கள் உணர்ந்ததும், அவர்களையே அழித்தனர்.
இந்த பின்னணியில் மட்டக்களப்பில் தமிழ் அரசு கட்சிக்காரர்கள் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் தொப்பியை அணிவது, இதுவரை தாம் பயணித்ததாக தாம் கூறும் பாதைக்கு மாற்றல்லவா?
ஒருவேளை, தமிழ் அரசு தலைவர்கள் ஆயுதம் தூக்கிக்கொண்டு, தொப்பிக்கல காட்டுக்குள் மறையப் போகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்தது.
காரணம், மட்டக்களப்பில் இன்னொரு சம்பவமும் நடந்தது.
மட்டக்களப்பில் நடந்த உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், உரையாற்றிய கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா இப்படி உரையாற்றினார்-
“இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு இன்னும் ஓரிரண்டு மாதங்களில் நடைபெறவுள்ளது. விரைவில் எமது மாநாட்டை கூட்டி, எதிர்காலத்தில் எமது இலட்சியத்தை அடைவதற்காக, தமிழர் தேசத்தில் தமிழர்கள் ஆளுவதற்காக, அந்த விடுதலையை- சுதந்திரத்தை பிரகடனம் செய்வதற்காக- அதற்கான போராட்டத்தை ஆரம்பிப்பதற்காக அந்த மாநாட்டிலே நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே குறிப்பிட்டு சொல்ல வேண்டும்“.
இந்த அறிவிப்புக்களை பார்த்து உண்மையில் மனம் பதறியது. மீண்டும் யுத்தம், இடம்பெயர்வு என்ற காலங்களிற்குள் மக்களை தள்ளக்கூடாதே என்ற பதைபதைப்புடன், போராட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய பல தமிழ் அரசு கட்சிக்காரர்களை தொடர்பு கொண்டோம். அது நேருவா, நேதாஜியா, நெடுமாறனா என குழம்பிப் போயிருந்தனர்.
இறுதியாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனை தொடர்பு கொண்டு வினவினோம்.
நேருவுமல்ல, நேதாஜியுமல்ல, அது காந்திஜி அணிந்த தொப்பி என விளக்கமளித்தார்.
“இந்திய சுதந்திர போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுத்த காந்திஜியின் வழியில் எமது விடுதலைப் போராட்டத்தையும் முன்னெடுக்கப் போகிறோம் என்ற செய்தியை இந்தியாவிற்கும், உலகத்திற்கும் அறிவிக்க அந்த வெள்ளைக்குல்லாவை தெரிவு செய்தோம்“ என்றார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமை போராட்டம் இனி அகிம்சை வழியிலேயே அமையும் என்பதை, களத்திலுள்ள அனைத்து தரப்புக்களும் 2009 ஆம் ஆண்டிலேயே அறிவித்து விட்டனவே, தொடர்ந்தும் அறிவித்து வருகின்றனவே, அதை யார் புரிந்து கொள்ளாமலிருந்து, இப்போது புதிதாக இந்த செய்தியை அனுப்புகிறீர்கள் என வினவினோம்.
“2009ஆம் ஆண்டின் பின்னர் அனைத்து தரப்பும் இந்த விடயத்தை சொல்லிவிட்டதுதான், நாமும் மீண்டும் ஒருமுறை சொல்லியுள்ளோம். அவ்வளவுதான்“ என்றார்.
காந்திய வழியில் போராடப்போவதாக குறிப்பிட்டாலும், தமிழ் அரசு கட்சியினர் அணிந்திருந்த குல்லா, நெதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அணிந்த தொப்பியை போலல்லவா இருக்கிறது என வினவினோம்.
“நேதாஜியின் வழியை நாம் ஏற்கவில்லை. நாம் காந்திய வழியிலேயே செயற்பட போகிறோம். குல்லா தயாரிப்பில் அவ்வளவு நுணுக்கமாக எல்லாம் பார்க்கவில்லையென நினைக்கிறேன். அது தயாரிப்பில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப ரீதியிலான சிக்கலாக இருக்கலாம்“ என தெளிவுபடுத்தினார்.
ஆக, அந்த குல்லாவிலிருந்த 3 பட்டன்களும், ஒரு ஃபஷனாக அடிக்கப்பட்டதே தவிர, குறியீடாக அடிக்கப்பட்டிருக்கவில்லை.
தமிழ் அரசுக்காரர்களின் தலையிலிருந்த குல்லா, நேதாஜியினுடையதா என சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறோம்.