26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இந்தியா

ஓபிஎஸ் தரப்பினரையும் உள்ளடக்கிய அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளர் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கி அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் பெப்ரவரி 27ஆம் தேதி நடக்க உள்ளதால், ‘இரட்டை இலை’ சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளரின் அங்கீகாரம் தொடர்பாக வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் இபிஎஸ்ஸின் கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் இன்னும் கருத்தில் கொள்ளவில்லை. ‘இரட்டை இலை’ சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியே முடிவு எடுப்பார்’ என்று தெரிவித்து இருந்தது.

ஏற்கெனவே அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்று ஓபிஎஸ் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இடைக்கால மனு மீதான விசாரணை, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ்ராய் அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது நடந்த வாதம்:

இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம்: இந்த வழக்கை சுட்டிக்காட்டி, ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தின் முடிவை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மறுப்பது ஏற்புடையது அல்ல.

தேர்தல் ஆணையம்: இதுதொடர்பாக இபிஎஸ் தரப்பில் விடுக்கும் கோரிக்கையை ஏற்க இயலாது. ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் விதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இரட்டைஇலை சின்னத்தை முடக்கும் எண்ணமும் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை.

நீதிபதிகள்: ஒரே ஒரு தொகுதிக்கான தேர்தல் என்றாலும் தேர்தல், தேர்தல்தான். அதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் (தேர்தல் ஆணையம்) தான் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார்: தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வழக்கில் மீண்டும் புதிதாக ஒரு மனுவைதாக்கல் செய்து இடைக்கால உத்தரவு கோருவது இதுவரை இல்லாத நடைமுறை. இந்த விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் சேர்ந்து பொது வேட்பாளரை அறிவித்தால் வேட்புமனுவில் ஓபிஎஸ் கையெழுத்திட தயார்.

நீதிபதிகள்: இது நல்ல யோசனை. இந்த பிரச்சினையை இப்படியே நீட்டிக்கொண்டே செல்லக்கூடாது. இதில் இரு தரப்பும் சுமுகமாக பேசி முடிவெடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.

இபிஎஸ் தரப்பு: இரு தரப்பும் சேர்ந்து முடிவு எடுக்க எந்த சாத்தியமும் இல்லை. நாங்கள் அறிவிக்கும் வேட்பாளரைத்தான் ஓபிஎஸ் ஏற்க வேண்டும்.

இவ்வாறு வாதம் நடந்தது.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் கூறியதாவது:

இரு தரப்பும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துவிட்டீர்களா, இல்லையா என்பது எங்களுக்கு தேவையல்ல. இதில் எங்கள் யோசனையை கேளுங்கள். ஒருவேளை, நீங்கள் ஏற்காவிட்டால், எங்களிடம் விட்டுவிடுங்கள். நாங்களே தகுந்த உத்தரவை பிறப்பிக்கிறோம்.

இல்லாவிட்டால், ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருமே வேட்புமனுவில் கையெழுத்திட வேண்டாம். இருவரும் முரண்டு பிடிப்பதால் இந்த இடைக்கால மனுவில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை. ஆனால் சில தீர்வுகளை கொடுக்க விரும்புகிறோம். ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய, ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவை இபிஎஸ் தரப்புகூட்டி முடிவு செய்ய வேண்டும். இரு தரப்புக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் இந்த பொதுக்குழு நடைபெற வேண்டும்.

பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் அனுமதித்து அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதன்பிறகே வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி அதன் ஒப்புதலை பெறலாம். அந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவின்படி, வேட்பாளர் யார் என்பதை தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் அனுப்பி வைக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த இடைக்கால உத்தரவு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான உத்தரவு மட்டுமே. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் இந்த உத்தரவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவு குறித்து இபிஎஸ் தரப்பில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இடைத்தேர்தலுக்காக நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ளது. அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது. பொதுக்குழுவில் யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பது ஊரறிந்த விஷயம்’’ என்றார்.

ஓபிஎஸ் தரப்பில் அதிமுக எம்எல்ஏ மனோ ஜ்பாண்டியன் கூறும்போது, ‘‘இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காக அதிமுகவின் பொது வேட்பாளருக்கான வேட்புமனுவில் கையெழுத்திட தயார் என ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ் கூறி வருகிறார். தற்போதும் உச்ச நீதிமன்றம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் இபிஎஸ் கையெழுத்திட கூடாது என்றுதான் கூறியுள்ளது. ஓபிஎஸ் உட்பட எங்கள் 4 பேரையும் உள்ளடக்கித்தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என உத்தரவிட்டிருப்பதில் இருந்தே எங்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது’’ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆன்மீக சங்கம நிகழ்வில் பாரிய தீ விபத்து

east tamil

மணமகனுக்கு வயது 64; மணமகளுக்கு 68 – முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம்

Pagetamil

தி.மு.கவில் இணைந்தார் சத்யராஜ் மகள்!

Pagetamil

காதலனை விசம் வைத்து கொன்ற யுவதிக்கு தண்டனை ஒத்திவைப்பு: பெண்ணல்ல பிசாசு என சாடல்!

Pagetamil

ரூ.6 கோடி மதிப்பிலான நகைகளுடன் மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா!

Pagetamil

Leave a Comment