இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக கோரி மீது மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி அவர், பதவி விலகக்கோரி முன்னணி வீராங்கனைகளான வினேஷ் போகத், சரிதா, சாக் ஷி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்ட பலர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் போராட்டத்தை தொடங்கினர். இவர்களுடன் முன்னணி வீரரான பஜ்ரங் புனியாவும் போராடி வந்தார்.
இந்த போராட்டம் நேற்று 3வது நாளாக தொடர்ந்தது. இதற்கிடையே போராட்டம் நடத்தியவர்களில் இருந்து பஜ்ரங் புனியா, ரவி தஹியா, சாக் ஷி மாலிக், வினேஷ்போகத் ஆகியோர் நேற்று இரவு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குரை நேரில் சந்தித்து பேசினர். சுமார் ஏழு மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர்.
நள்ளிரவும் கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்டத்தின் முடிவில் வீராங்கனைகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் அனுராக் தாக்குர். அப்போது இந்த விவகாரத்தில் விசாரணை முடியும் வரை மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் ஒதுங்கி இருப்பார் என்று அனுராக் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வீராங்கனைகள் அறிவித்தனர்.
தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு மேற்பார்வைக் குழுவை அமைப்பதாக அனுராக் தாக்குர் அறிவித்தார் மேலும் நான்கு வாரங்களில் நீதி வெல்லும் என்று உறுதியளித்தார்.