26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

‘தேசியத்தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை உடைத்த வரலாற்று துரோகியாகி விட்டீர்கள்’: இரா.சம்பந்தனிற்கு காட்டமான கடிதம் அனுப்பிய கே.வி.தவராசா!

2009ம் ஆண்டு யுத்தம் மெனிக்கப்படட பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்தார்கள். திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி அதை உங்களை வைத்தே அமுல்படுத்தினார்கள். இப்போது ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பையே சின்னாபின்னமாக்கி வரலாற்றுத் துரோகத்திற்கு பாத்திரவாளியாகி விட்டீர்கள் என இரா.சம்பந்தனிற்கு சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும், மத்தியகுழுஈ அரசியல்குழு உறுப்பினருமான கே.வி.தவராசா.

பல்வேறு விடயங்களை புட்டுப்புட்டு வைத்து, இரா.சம்பந்தனிற்கு அனுப்பி வைத்துள்ள காட்டமான கடிதத்திலேயே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

நீங்கள் தமிழ்த் தேசியத்தின் அரசியல் இருப்புக்கு சாவுமணியடிப்பீர்கள் என்பது பலருக்கும் அப்போது தெரிந்திருந்தது. ஆனாலும் உங்களில் மாற்றம் வரும் என்று நம்பிக்கையோடு மக்களும் காத்திருந்தார்கள்; விசுவாசிகளான நாமும் காத்திருந்தோம். ஆனால் மகிந்த நாட்டை காப்பாற்றிதனாலேயே திருகோணமலைக்கு சுதந்திரமாக சென்று வரமுடிகின்றது என பாராட்டியதுடன், 2020ம் ஆண்டு தேர்தல் முடிந்த பின்னர் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் பிரதேசவாதத்தை கக்கியதுடன் தேசியத் தலைவர் மகிந்த என நாடாளுமன்றத்தில்; நீங்கள் புகழாரமும் சூட்டினீர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் விபரம் வருமாறு-

கையறுநிலையின் கடைசிக் கட்டத்தில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதவேண்டிய சூழலை நீங்களே உருவாக்கியிருக்கிறீர்கள். போர் முடிவுற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு இருந்த ஒரேயொரு கலங்கரை விளக்கம் கூட்டமைப்பு மட்டுமே.

தமிழினத்தின் விடுதலையை இலக்காகக் கொண்டுதான் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது ஒருபலம் பொருந்திய இயக்கமாகப் புலிகள் நிலைபெற்ற காலத்தில் தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவே அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பலம் பொருந்திய அரசியல் இருப்பை தங்களின் தலைமையில் கூட்டமைப்பு நிரூபித்துக் காட்டியுமிருந்தது.

தமிழரின் அரசியல் இணைப்பும் ஒற்றுமையும் ஒரேகொள்கைக்கான அணியாகவும் மக்களின் அங்கீகாரமாகவும் 2010 ஆண்டுத் தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தல் முடிவும் வலுவானதொரு செய்தியை பெரும்பான்மை அரசியல் தலைமைகளுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தன.ஆனால் சில ஒட்டகங்கள் கூட்டமைப்பெனும் கூடாரத்துக்குள் நுழைந்ததோடு, கூட்டமைப்பு தேய்ந்து கொண்டே சென்று 2023 இல் அமாவாசையாகி எல்லாம் முடிந்துவிட்டது போன்று தோன்றுகின்து.

கம்பீரமாகத் தமிழரின் அரசியல் இருப்பைக் கர்ஜனையோடு வெளிப்படுத்திய கூட்டமைப்பு இப்போது இல்லை. கூட்டமைப்பின் இந்த நிலைக்கு நீங்களும் பிரதான காரணகர்த்தாவாகிவிட்டீர்கள். வரலாற்றின் வசைச்சொல்லுக்கு இலக்காகி விட்டீர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு என்று தலைப்பிட்டு மிக மிக உருக்கமான வேண்டுகோளை கடந்த காலங்களில் பகிரங்கமாக ஊடகங்களில் வெளியிட்டதோடு உங்களுக்கும் அனுப்பிவைத்திருந்தேன். எதை நீங்கள் செய்யக் கூடாது என்று உங்களிடம் அந்தக் கடிதங்கள் வாயிலாக கெஞ்சுதலாக வேண்டியிருந்தேனோ அவை அனைத்தையும் இப்போது செய்து முடித்துவிட்டு தன்னந்தனியாக இருக்கின்றீர்கள்.

2009ம் ஆண்டு யுத்தம் மெனிக்கப்படட பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்தார்கள். திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி அதை உங்களை வைத்தே அமுல்படுத்தினார்கள். கடைசியில் தமிழரசுக்கட்சியைத் தவிர இப்போது ஒருகட்சியும் இல்லாத நிலையில் தனிக்கட்சி கூட்டமைப்பாகாது என்பதை நீங்கள் அறிவீர்களா? கூட்டமைப்பு இல்லாமல் அதன் தலைவர் என்ற பதவியும் பறிபோய், வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் நிற்பதைக் காண மனம் சகிக்கவில்லை.

கூட்டமைப்பில் இருந்த நம்பிக்கை சிதையக் காரணமாரனவர்களைக் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் பொறுப்பற்ற தலைமையாக நீங்கள் நடந்துகொண்டபோதே பொறுப்புள்ள தமிழ் தேசியவாதிகள் இதைச் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் நீங்கள் எதையும் பொருட்படுத்தவில்லை.

தமிழர் அரசியலின் இறுதி நம்பிக்கையாகவும் ஒளியாகவும் திகழ்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டும் பல்வேறு காரணங்களைச் சொல்லி வெளியேறிய அனைவரையும் மக்கள் அரசியல் அநாதைகளாக்கிய வரலாறு முன்பிருந்தது. ஆனால் அது உங்கள் காலத்தில் சிதைவுற்று இறுதியில் கூட்டமைப்பு இருந்தாலும் ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்று என்ற நிலைக்கு மக்களைக் கொண்டுவந்துவிட்டது.

நீங்கள் தமிழ்த் தேசியத்தின் அரசியல் இருப்புக்கு சாவுமணியடிப்பீர்கள் என்பது பலருக்கும் அப்போது தெரிந்திருந்தது. ஆனாலும் உங்களில் மாற்றம் வரும் என்று நம்பிக்கையோடு மக்களும் காத்திருந்தார்கள்; விசுவாசிகளான நாமும் காத்திருந்தோம். ஆனால் மகிந்த நாட்டை காப்பாற்றிதனாலேயே திருகோணமலைக்கு சுதந்திரமாக சென்று வரமுடிகின்றது என பாராட்டியதுடன், 2020ம் ஆண்டு தேர்தல் முடிந்த பின்னர் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் பிரதேசவாதத்தை கக்கியதுடன் தேசியத் தலைவர் மகிந்த என நாடாளுமன்றத்தில்; நீங்கள் புகழாரமும் சூட்டினீர்கள். இப்போது ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பையே சின்னாபின்னமாக்கி வரலாற்றுத் துரோகத்திற்கு பாத்திரவாளியாகி விட்டீர்கள்.

இனிமேல் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று நீங்கள் எந்த முகத்தோடு போய் ரணிலுடன் பேச்சு நடத்தமுடியும்? கூட்டமைப்பு இருக்கும் வரையே உங்களுக்கும் மரியாதை மக்களிடையே மட்டுமல்ல அரசியல் தலைவர்களிடமும் இருந்தது . ஆனால் கூட்டமைப்பே இல்லையென்றான பின்னர், அற்ற குளத்து அறுநீர்ப்பறவையாக அவையெல்லாமே பறந்தோடிப் போய்விட்டதை ஏன் இன்னும் உணராதிருக்கிறீர்கள் என்பது ஆச்சரியமே.

ஒருகாலத்தில் எங்கள் இனத்தின் ஆளுமை மிக்க அரசியல்தலைவர் என்ற விம்பம் உங்களுக்கு எம்மிடையே இருந்தது. அதை நீங்களே உடைத்துவிட்டீர்கள். காலம் உங்கள் கடைசிச் செயலையே கணக்கில் எடுக்கும். அதனால் எப்போதைக்கும் கூட்டமைப்பைச் சிதைத்தவர் சம்பந்தர் என்ற தீராப்பழியை நீங்கள் சுமப்பதைக் காண எம்மாலும் சகிக்கமுடியாதுதான். ஆனாலும் அதுவே விதி. ‘ சேராத இடம் சேர்ந்து’ வஞ்சத்தில் வீழ்ந்தீரே சம்பந்தரே என்று உங்களுக்காக அனுதாபப்பட மட்டுமே எம்மால் முடியும்.

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

Leave a Comment