இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சார்பில் கிளிநொச்சியில் 3 சுயேட்சைக்குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிகிறது.
கிளிநொச்சி ஜமீன் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஏகபோகத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்பதற்காக, தமிழ் அரசு கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இந்த 3 சுயேட்சைக்குழுக்களின் பின்னணியில் இருப்பதாக அறிய முடிகிறது.
இலங்கை தமிழ் அரசு கட்சியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்வதென்ற இறுதி முடிவை, பங்காளிகளிடம் கடந்த ஜனவரி 9ஆம் திகதி அறிவித்தன. இந்த சந்திப்பின் போது, கிளிநொச்சியில் சிறிதரனை மீறி தம்மால் எதுவும் செய்ய முடியாதென தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், கிளிநொச்சி மாவட்டத்தின் வேட்பாளர் தெரிவில், தனது தீவிர ஆதரவாளர்களை மாத்திரமே சிறிதரன் எம்.பி தெரிவு செய்திருந்தார்.
தமிழ் அரசு கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அண்மைகாலமாக கிளிநொச்சியில் தீவிரமாக செயற்பட்டிருந்தார். அங்கு சில பிரதேசசபை உறுப்பினர்களை இணைத்து, தனது ஆதரவு அணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில், கிளிநொச்சியில் வட்டார தெரிவு என சிறிதரன் அண்மையில் ஒரு நடவடிக்கை மேற்கொண்டு, எம்.ஏ.சுமந்திரன் அணியினரை முக்கிய பொறுப்புக்களிலிருந்து அகற்றினார்.
அத்துடன், வேட்பாளர் தெரிவிலும் சுமந்திரன் ஆதரவாளர்களை முற்றாக புறக்கணித்திருந்தார். சுமந்திரனுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், தற்போது பிரதேசசபை உறுப்பினர்களாக இருந்தாலும், அவர்கள் புதிய வேட்பாளர் பட்டியலில் களமிறக்கப்படவில்லை.
இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரின் பின்னணியில் கிளிநொச்சியில் 3 சுயேச்சைக்குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த சுயேச்சைக்குழுக்களிற்கான கட்டுப்பணம் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஊடாக இன்று அனுப்பி வைக்கப்பட்டது. சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.