இந்திய மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் பாரிய இரும்புப் படகுகள் இரண்டினை மீனவர்களுக்கு தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அடுத்த வாரம் இந்த படகுகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தினர் இன்று (13) போராட்டத்தினை முன்னெடுத்து, அமைச்சரின் அலுவலகத்தில் மகஜரினை கைளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மீனவர்களின் பிரச்சினைகள் நான் நன்கு அறிவேன். இந்த பிரச்சினை நீண்ட காலமாக நடைபெறுகிறது. கடற்படையினர் இடையிடையே இந்திய மீனவர்களை கைது செய்கிறார்கள். ஆனால் அது போதாது. ஆகையால் இதில் நீங்கள் கடற்படையினை மட்டும் நம்பாது நீங்களும் எதிர்க்க வேண்டும்.
இந்திய மீனவர்கள் பெரிய இரும்பு படகுகளில் வருகிறார்கள். எமது மீனவர்களின் படகுகள் சிறியவை. அதனால் கைப்பற்றிய இந்திய மீனவர்களின் படகுகள் உள்ளன. அவற்றை உங்களிடம் தர தயாராக உள்ளேன். இந்திய மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் இரண்டு பாரிய படகுகளை நான் தருகிறேன்.
இதன்போது மீனவர்கள்”படகு வெள்ளோட்டத்திற்கு நீங்கள் வரவேண்டும்” என்றனர். அதற்கு அவர் ” நான் ஒன்றினை கூறிவிட்டு பங்கருங்குள் (பதுங்குகுழி) ஒழிந்திருக்க மாட்டேன். நானும் வருவேன்“ என்றார்.
குருநகரில் இருந்து ஆரம்பமாகிய இந்த பேரணி நீரியல் வள திணைக்களத்திற்கு சென்று அங்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது அலுவலகத்திற்கு சென்றது. இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மகஜர் ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகள் ஏந்தியவாறும் கோஷமிட்டவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டனர்.