இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயிலுக்கு வருவது வழக்கம். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அவர் கோயிலுக்கு வரவில்லை. தற்போது அவர் புத்த கயாவில் முகாமிட்டு மகாபோதி கோயிலில் வழிபாடுகளை நடத்தி வருகிறார்.
திபெத் சுதந்திர போராட்டத்தை தலாய் லாமா தூண்டி வருவதாக குற்றம் சாட்டி வரும் சீன அரசு, அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் தற்போது புத்த கயாவில் தங்கியிருக்கும் தலாய் லாமாவை சீனாவை சேர்ந்தபெண் உளவாளி சோங் ஜியோலன் வேவு பார்ப்பதாக இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
புத்த துறவி வேடத்தில் பிஹாரில் சுற்றித் திரிந்த சோங் ஜியோலனின் வரைபடத்தை மாநில போலீஸார் வெளியிட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீன பெண் உளவாளி சோங் நேற்று பிடிபட்டார். அவரது விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருப்பதால் அவர் சீனாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று மத்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.