கடந்த சில நாட்களாகச் சீன அரிசி பற்றி அதிகம் பேசப்படுகிறது. சமைத்த பலர் சாப்பிட முடியாதவாறு குழைந்துபோய் இருப்பதாகக் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இது சீனர்களின் உணவுப் பண்பாட்டில் இடம்பிடித்துள்ள பசைத் தன்மைகூடிய ஸ்ரிக்கி றைஸ் (sticky rice) ஆகும். தமிழ் மக்களின் உணவுப் பண்பாட்டில் கடலட்டை எவ்வாறு இல்லையோ, அதேபோன்றே இந்த ரக அரிசியும் இல்லை. சீனா மனிதாபிமான நோக்கில் அரிசியை வழங்கியிருந்தால் எங்களது பயன்பாட்டிலுள்ள அரிசியைத் தெரிவு செய்து வழங்கியிருக்கும். ஆனால், இந்தச் சீன அரிசியில் மனிதாபிமானம் இல்லை ; வல்லாதிக்கப் போட்டி அரசியலே அதிகமாகவுள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் “அற்றார் அழிபசி தீர்த்தல்” என்ற திட்டத்தின்கீழ் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. நேற்று 29.12.2022 (வியாழக்கிழமை) பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பொருளாதார நெருக்கடியால் முழு இலங்கையிலும் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதிலும் ஏற்கனவே யுத்தத்தினாலும் கொரோனாவாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியால் குடும்பங்கள் படும் அவலத்தை சீனா சாதகமாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே அரிசியை வழங்கி வருகிறது. பசியோடு இருக்கும் மக்களைச் சீன அரிசியை நிராகரிக்குமாறு எவருமே கோரமுடியாதபோதும் இந்த அரிசியிலுள்ள அரசியலை எமது மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி உடனடியாகத் தீரப்போவதில்லை. இதனாலேயே அரசாங்கம் பயன்படுத்தாமலுள்ள காணிகளை எடுத்து இராணுவத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது. இது உணவு உற்பத்தி என்ற பெயரில் காணிகளை கையகப்படுத்தும் மறைமுக நோக்கத்தையும் கொண்டுள்ளது. வடக்குக் கிழக்கில் உள்ள வெற்றுக் காணிகளில் எமது பொது அமைப்புகள் அல்லது தன்னார்வலர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட முன்வரவேண்டும். பல வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். குத்தகை அடிப்படையிலேனும் பயிர்ச்செய்கைக்கு காணிகளை வழங்க அவர்கள் முன்வரவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் பசியால் ஒரு சிறுவன் இறந்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சமூகத்துக்குமே இழுக்காகும். போர்க்காலத்தில் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டிருந்தபோதுகூட பட்டினியால் எவரும் இறந்ததில்லை. பிரதேச செயலகங்களில் கிராம சேவையாளர் பிரிவுரீதியாகப் பட்டினியை எதிர்நோக்கியுள்ள வறிய குடும்பங்களின் விபரங்கள் உள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டுமே அன்னதானங்கள் என்று இல்லாமல் இக்குடும்பங்களின் சிலநாள் பசியையேனும் போக்க எமது ஆலயங்களும் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.