உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பதிலடியாக மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொண்ட விலை வரம்பிற்கு இணங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு எண்ணெய் விற்பனையை தடை செய்யும் ஆணையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டார்.
ரஷ்யா செவ்வாயன்று விலை வரம்புக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதிலைக் கொடுத்தது. வரம்பை கடைபிடிக்கும் நாடுகளுக்கு பெப்ரவரி 1 முதல் ஐந்து மாதங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களை வழங்க தடை விதிக்கிறது.
எவ்வாறாயினும், விலை உச்சவரம்பின் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு ஜனாதிபதி சிறப்பு அனுமதி வழங்கலாம் என்று ஆணை குறிப்பிடுகிறது
ஜி 7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை இந்த மாதம் ரஷ்யாவின் கடல்வழி கச்சா எண்ணெயின் விலையை கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டன. அதன்படி, டிசம்பர் 5 முதல் பீப்பாய்க்கு 60 டொலர் என நிர்ணயம் செய்தன.
60 டொலரை விட குறைந்த விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென தீவிர ரஷ்ய எதிர்ப்பு நாடுகள் வலியுறுத்தின. எனினும், 60 டொலர் நிர்ணயம் மூலம் ரஷ்யாவின் வருவாயைக் கட்டுப்படுத்த முயல்வதுடன், ரஷ்யாவை அதீதமாக சீண்டாமல் உலக சந்தைக்கு தொடர்ந்து எண்ணெய் வழங்குவதை உறுதி செய்ய மேற்கு நாடுகள் முயன்றன.
இந்த தடையையடுத்து, புதிய வாங்குபவர்களைக் கண்டுபிடிப்போம் என்று ரஷ்யா நம்பிக்கை தெரிவித்தது. அத்துடன், உக்ரைனில் அதன் இராணுவ நடவடிக்கையை பாதிக்காது என்று கூறியிருந்தது.
எவ்வாறாயினும், ரஷ்யா ஜனாதிபதியின் ஆணை குறைந்தபட்சம் ஒரு உடனடி விளைவைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது என எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வாளர் வியாசெஸ்லாவ் மிஷ்செங்கோ கூறினார்.
ஏற்கனவே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. “இது ஆணையின் நேரடி தாக்கம் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.
சவூதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது, மேலும் அதன் விற்பனையில் பெரும் இடையூறு ஏற்படுவது உலகளாவிய எரிசக்தி விநியோகங்களுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.