தற்போதைய நிலையில் மாவை சேனாதிராசாவை தலைவராக கொண்டு தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை தமிழ் அரசு கட்சியிலுள்ள சுயநலவாதிகளே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு எதிராக செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இன்று (27) தமிழ்பக்கத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு-
நான் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுவதாக மட்டக்களப்பு எம்.பி சாணக்கியன் குறிப்பிட்டதாக சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அவர் சிறியவர். அப்படித்தான் பேசுவார். அதனை பொருட்படுத்த தேவையில்லை.
நான் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதை சிறுபிள்ளைத்தனம் என அவர் சொன்னாராம். ஆனால், அந்த கடிதம் எழுதியதால் பல விடயங்கள் நடந்துள்ளன.
நாங்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும், சுமந்திரன் தொலைபேசியில் அழைத்து, ஜனாதிபதி கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் என்றார்.
போதிய அவகாசம் வழங்காமல் சந்திப்பு திகதி குறிப்பது பொருத்தமற்றது என நான் ஒரு கடிதம் அனுப்பினேன். அந்த கடிதம் அனுப்பியதன் பின்னர்தான் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சொன்னார்கள், அந்த சந்திப்பு ஜனாதிபதி திட்டமிட்டதல்ல. நாங்கள் சந்திக்க வரலாமா என சுமந்திரனே கேட்டுள்ளார். சரி, கேட்கிறீர்கள், வாருங்கள் என்றுதான் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதி அழைப்பதாக எமக்கு சுமந்திரன் சொன்னார்.
அதையும், நாங்கள் யாழ்ப்பாணம் வந்த பின்னர்தான் சுமந்திரன் அழைப்பு விடுத்தார். நாங்கள் சந்திப்பிற்கு வரக்கூடாதென்பதற்காகவே அவர் அப்படிச் செய்திருக்கிறார்.
நான் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு அனுப்பப்பட்ட பதிலில், சுமந்திரன் கேட்ட சந்திப்பு உத்தியோகப்பற்றற்றது என்றும், ஜனவரி முதல் வாரத்தில் திட்டமிட்டுள்ள சந்திப்பிற்கு போதிய அவகாசத்துடன் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அந்த கடிதத்தினாலேயே இதெல்லாம் நடந்துள்ளது. என்னை விட இரண்டரை மடங்கு வயது குறைந்தவர் இவையெல்லாம் விளங்காமல் பேசியுள்ளார் என்றார்.
இதேவேளை, தமிழ் தேசிய கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தரப்புக்களிற்குள் பிரிவினை இருப்பதால்தான் சிங்கள அரசுகள் எம்மை ஏமாற்ற முடிந்தது. எமக்குள் ஒற்றுமை இருக்கிறதென்பதை கண்டால் அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் இருக்குமென நம்புகிறோம்.
ஆனால் இப்பொழுதும் தமிழ் தரப்பில் சிலர் தாம் தனித்து போக வேண்டுமென கூறுகிறார்கள். ஆனால், தமிழ் தேசிய கட்சிகளை இயன்றவரை ஒன்றிணைத்து செயற்படவே முனைகிறோம்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் செயற்குழுவில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட முடிவுகள் பற்றி செய்திகள் வெளியாகின. அந்த செயற்குழுவில் உள்ள 9 பேரில் பெரும்பான்மையானவர்கள் மாவை சேனாதிராசாவிற்கு எதிரானவர்கள். ஆனால் ஜனவரியில் கொழும்பில் தமிழ் கட்சிகளின் சந்திப்பு உள்ளதாக மாவை சொன்னதாகவும் செய்தி வந்தது. இது முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடும்.
ஆனால் இந்த முரண்பாடு ஏற்படுவதற்கு சிலரது சுயநல சிந்தனைகள்தான் காரணம். மாவை சேனாதிராசாவை சிறையிலிருந்து விடுவித்த நீதிபதி நான்தான். ஆனால், இப்போதைய நிலைமையில் மாவையை எங்கள் தலைவராக கொண்டு, விடயங்களை நகர்த்தலாம் என்றுதான் சொல்கிறேன். மக்களிற்காக நாங்கள் செயற்பட ஆரம்பித்தால், சுயநல சிந்தனைகளை கைவிட்டு, மக்கள் சார்பில்தான் சிந்திக்க வேண்டும்.