பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் வாகனத்தில் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தவிசாளர் சந்திரா சாப்டரின் புதல்வரான தினேஷ் ஷாஃப்டர், ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவராவார்.
பொரளை கனத்தை மயானத்தில் வாகனம் ஒன்றில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரைக் கண்டுபிடித்த சக ஊழியர், ஷாஃப்டரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்தார்.
எனினும், 51 வயதான தினேஷ் ஷாஃப்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். நேற்று இரவு 11.30 அளவில் உயிரிழந்தார்.
ஷாஃப்டர் நேற்று காலை தனது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போனதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பல கோடி ரூபா கடன் தொகையை பெற்று வருவதாக கூறி வீட்டிலிருந்து சென்றதாக தெரிய வருகிறது.
அவரது மனைவி சிறிது நேரத்தில் அவரை அழைத்ததாகவும், அவரது தொலைபேசி சுவிட்ச் ஓஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர் பொரளை மயானத்தில் தங்கியிருப்பதாக அவரது மனைவியின் கைத்தொலைபேசிக்கு சமிக்ஞை கிடைத்தது.
உடனடியாக நிறுவனத்தின் அதிகாரியொருவருக்கு தகவல் வழங்கினார். அவர் கனத்தைக்கு சென்ற போது, தினேஷ் ஷாஃப்டர் காயங்களுடன் ஓட்டுநர் இருக்கையில் கைகள் கட்டப்பட்டு, கழுத்தில் கம்பி கட்டப்பட்ட நிலையில், அவரது ஊழியர் ஒருவரால் மீட்கப்பட்டார்.
காருக்குள் அவரை கொட்டன்களால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.
வாகனத்திற்குள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் தினேஷ் ஷாஃப்டரிடம் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் தினேஷ் ஷாஃப்டர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மூன்று முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொரளை பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.