ஹபராதுவையில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் என கூறப்படும் தனது காதலியை சித்திரவதை செய்த புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை காலி பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர் கைது செய்துள்ளனர்.
ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் கான்ஸ்டபிளை கொடூரமாக தாக்கியதாகவும், அவரது மொபைல் போனை சோதனை செய்யும் போது கடித்ததாகவும் கூறப்படுகிறது. காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த பொலிஸ் உத்தியோகத்தர் 200,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண், மில்லனிய காவற்துறையில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார். அவர் காலி பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
தனது காதலரான பொலிஸ் கான்ஸ்டபிள் தனது கைப்பேசியை எடுத்து ஹோட்டல் அறையில் சோதனை செய்ததாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது தன்னை உதைத்ததாகவும், பானம் நிரப்பப்பட்ட போத்தல் மற்றும் தோல் பெல்ட்டால் அடித்ததாகவும் அவர் கூறுகிறார். தன் காதலன் தன்னை கடித்ததாகவும், தாக்குதலுக்கு கூடுதலாக காயங்களை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.




