மேற்கிந்தியத்தீவுகளின் முன்னாள் ரிக்கெட் நட்சத்திரம் ஷிவ்நரைன் சந்தர்போலின் மகன் டஜ் நரைன் சந்தர்போல் (Tagenarine) அரைச்சதம் அடித்தார்.
அவுஸ்திரேலியா- மேற்கிந்தித்தீவுகள் அணிகளுக்கு இடையில் தற்போது பேர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டஜ் நரைன் அறிமுக வீரராக களம் கண்டுள்ளார்.
26 வயதான அவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்போலின் மகன். தந்தையை போலவே இவரும் இடது கை துடுப்பாட்ட வீரர்தான். கயானா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் லிஸ்ட் ஏ மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் அவர் விளையாடி உள்ளார். 19 வயதிற்குட்பட்டோர் கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய அனுபவமும் கொண்டவர்.
கடந்த ஓகஸ்டில் பங்களாதேஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான நான்கு நாட்கள் போட்டியில் சதம் விளாசி அசத்தினார். அதனால், அவருக்கு அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் பதிவு செய்தார். அதன் மூலம் பெர்த் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார்.
தனது முதல் டெஸ்ட் போட்டியில் 79 பந்துகளில் 51 ரன்களை எடுத்து அவுட்டானார். அவரது தந்தை ஷிவ்நரைன் சந்தர்போலும், அவுஸ்திரேலியாவின் கபா மைதானத்தில்தான் அறிமுகமாகினார். அவரது முதல் டெஸ்டில் 230 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியிலும் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 479 ஓட்டங்களை குவித்தது.
தற்போது ஜூனியர் சந்தர்போல் அறிமுகமான போட்டியிலும், அவுஸ்திரேலியா 598 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஜூனியர் சந்தர்போலின் ஆட்டம் குறித்து மேற்கிந்தியத்தீவுகளின் கப்டன் பிராத்வைட் குறிப்பிடுகையில்,
“அவரது ஆட்டம் பார்க்க நன்றாக இருந்தது. அவர் ஒரு போராளி. அதனால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் எப்போதும் போராடுவார். தனது நேரத்தை எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் பேட் செய்வார். அவருக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
அவர் ஸ்பெஷலாக இருக்கப் போகிறார். அவர் ஒரு சிறந்த வேலையைச் செய்யப் போகிறார். இன்னும் பல ஆண்டுகளாக அவருடன் பேட்டிங் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.