உலகிலேயே செலவு குறைந்த நகரங்களில் கொழும்பு இடம்பிடித்துள்ளது.
எக்கனோமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) வருடாந்த புள்ளிவிபரத்தின்படி, இந்தியாவின் பெங்களூர் மற்றும் அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸுடன் கொழும்பு 161வது இடத்தைப் பிடித்துள்ளது.
EIU இன் உலக வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, இந்தியாவின் சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்கள் கொழும்பிற்குக் கீழே உள்ளன, அதே சமயம் தெஹ்ரான், ஈரான், திரிபோலி, லிபியா மற்றும் சிரியாவின் டமாஸ்கஸ் ஆகியவை உலகின் மலிவான நகரங்களாக உள்ளன.
இதற்கிடையில், உலகின் மிக செலவான நகரங்கள் பட்டியலில், அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளன.
கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த டெல் அவிவ் இப்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு கணக்கெடுப்பு ஓகஸ்ட் 16 மற்றும் செப்டம்பர் 16, 2022 க்கு இடையில் நடத்தப்பட்டது.
கணக்கெடுப்பு 173 நகரங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அமெரிக்க டொலர்களில் செலவை ஒப்பிடுகிறது. இந்த ஆண்டு மதிப்பாய்வில் உக்ரைன் தலைநகர் கீவ் சேர்க்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக, உலகின் பெரிய நகரங்களில் சராசரி வாழ்க்கைச் செலவு இந்த ஆண்டு 8.1% அதிகரித்துள்ளது என்று புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
உக்ரைனில் நடந்த போர் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் கோவிட் தாக்கம் ஆகியவை அதிகரிப்புக்குப் பின்னால் உள்ள காரணிகளாக அடையாளம் காணப்பட்டன.