யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள யாகத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழகத்தின் பழனி முருகன் ஆலயத்தின் புலிப்பாணி ஆசிரமத்தில் உள்ள சிவானந்த புலிப்பாணி சுவாமியிடம், வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா இன்று பழனி முருகன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்.
இது குறித்து இந்திய ஊடகச் செய்திகளில்,
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று சிறப்பு தரிசனம் செய்துள்ளார்.
ஜீவன் தியாகராஜா பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ததற்காக வந்தபோது கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்து ரோப் கார் மூலமாக மலைக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். உச்சிக்கால பூஜையில் தரிசனம் செய்தார்.பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக யாழ்ப்பாணம் பகுதியில் விரைவில் நடக்கவுள்ள யாகத்திற்காக புலிப்பாணி ஆசிரமத்தில் உள்ள சிவானந்த புலிப்பாணி சுவாமிகளை அழைப்பதற்கான அழைப்புகளை கொடுத்து வரவேற்றார்.
அப்போது ஜீவன் தியாகராஜாவிடம், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதில் அளிக்க முடியாது என்றார்.
அதேபோல் இலங்கையில் பொருளாதார சூழ்நிலை குறித்த கேள்விகேட்டபோது அது என் பொறுப்பு. என் மக்களை நான் பார்த்து கொள்வேன் என பதில் கூறினார்.
இப்போதைய ஆட்சி முறையை பற்றி கேட்டபோது, தான் சுவாமி தரிசனம் செய்யவே வந்துள்ளேன் இதை பற்றி இப்போது ஏன் கேட்கிறீர்கள் என்று சிரித்துவிட்டு சென்றுவிட்டார்.
இதேவேளை, வடமாகாண ஆளுனர் அலுவலகத்தின் தகவல்படி, இந்தியாவில் நடைபெறும் இளம் தொழில்முனைவோர் மாநாட்டிற்கு அவர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.