140 ஆண்டுகளாக அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனம் ஒன்று பப்புவா நியூ கினியா தீவுகளில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
கறுப்பு மற்றும் ஒரேஞ்ச் நிற இறகுகள் மற்றும் சிவப்பு கண்களை கொண்ட புறா இனம் (black-naped pheasant pigeon) ஒன்றினை 1882 ஆம் ஆண்டுக்குப் பிறகு காடுகளில் காண முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அந்த இனத்தின் பறவை ஒன்று 140 ஆண்டுகளுக்குப் பிறகு பப்புவா கினியா தீவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொலைந்த பறவைகளைக் கண்டுபிடிப்பதற்கு ‘லாஸ்ட் பேர்ட்ஸ்’ என்ற அமைப்பு, விஞ்ஞானிகளுக்கு உதவி வருகிறது. இந்த அமைப்பின் உதவியுடன்தான் விஞ்ஞானிகள் இப்பறவை இனத்தை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானி டோகா நாசன் கூறும்போது, “இதுவே மகிழ்ச்சியான தருணம். என் கால்கள் நடுங்குகின்றன” என்று சிலிர்ப்புடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
லாஸ்ட் பேர்ட்ஸ் அமைப்பின் ஜான் பேசும்போது, “இப்பறவையை கண்டுபிடிப்பதற்காக பல இடங்களில் கமரா வைக்கப்பட்டது. பல தேடல்களுக்குப் பிறகு பெர்குசன் தீவு பகுதியில் செப்டம்பர் மாதம் இந்தப் பறவையின் புகைப்படம் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
செங்குத்தான முகடுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் கொண்ட பகுதியில் தரையில் வாழும் பறவையை பெர்குசன் தீவுப் பகுதியில் 2019 ஆம் ஆண்டில் பார்த்ததாகவும், அதன் அழைப்புகளைக் கேட்டதாகவும் உள்ளூர் வேட்டைக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தப் பறவை இனத்தை கண்டதாகவும், சத்தத்தை கேட்டதாகவும் உள்ளூர் வேட்டைக்காரர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் விஞ்ஞானிகள் தேடுதலை ஆரம்பித்திருந்தனர். எனினும், பறவையை விஞ்ஞானிகளால் காண முடியவில்லை. இந்த நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அந்தத் தீவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்ற குழுவினர், அங்குள்ள ஆற்றின் அருகே 3,200 அடி உயரமுள்ள மலைப்பாதையில் கமராவை வைத்து படம் பிடித்தனர்
ஏறக்குறைய ஒரு மாதமாக, பறவையை தேடிய போதும் பலன் கிட்டியிருக்கவில்லை. இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் தீவை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, முதுகலை ஆராய்ச்சியாளரும், பயணக் குழுவின் இணைத் தலைவருமான ஜோர்டான் போயர்ஸ்மா, கமரா காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பறவை நடந்து செல்வதைக் கண்டு “திகைத்துப் போனார்”.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பறவை இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் அழிந்துபோன பிற பறவை இனங்களான கிறிஸ்டினா பிக்ஸ் போன்ற பறவைகளையும் கண்டறியலாம் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு பிறந்துள்ளது.