தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் 25ஆம் திகதி மாலை சந்தித்து பேசவுள்ளனர்.
தமிழ் தேசிய பரப்பிலுள்ள பிரதான கட்சிகளின் தலைவர்கள் அன்றைய தினம் மாலையில், கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் சந்தித்து பேசவுள்ளனர். இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மேற்கொண்டு வருகிறார்.
அன்றைய தினம் சந்திப்பில் கலந்து கொள்வதை, அனேகமாக தமிழ் கட்சிகளின் தலைவர்கள், தமிழ்பக்கத்திடம் உறுதி செய்தனர்.
“பில்லி சூனியம் விரட்டப்படும். அனைவரும் வாரீர்“ என சில மத, மந்திரவாதிகள் பத்திரிகை விளம்பரம் செய்வதை போல, அண்மையில் எம்.ஏ.சுமந்திரனின் பெயரில் ஒரு பத்திரிகை செய்தி வெளியானது.
அனைத்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் சம்பந்தன் வீட்டிற்கு அழைக்கப்படுகிறார், வாரீர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த செய்தி உண்மையானதா, போலியானதா என்பதே பல தலைவர்களிற்கு தெரிந்திருக்கவில்லை. அந்த அழைப்பு அணுகுமுறையிலேயே ஒரு “வில்லங்கத்தனம்“ இருப்பதாக பொதுப்பரப்பில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
பத்திரிகை செய்தி வெளியான ஓரிரு நாள் கழித்த பின்னரே பல தலைவர்களிற்கு தொலைபேசியில் தகவல் வழங்கப்பட்டு, அந்த சமயத்தில் மின்னஞ்சலும் அனுப்பப்பட்டிருந்தது.
இதனால் அந்த சந்திப்பு அழைப்பை யாருமே கண்டுகொள்ளவில்லை.
இந்தவகையான தவறான அணுகுமுறைகளை கடைப்பிடித்தால், இரா.சம்பந்தனின் எந்த அழைப்பையும், யாருமே கண்டுகொள்ளமாட்டார்கள் என இரா.சம்பந்தனிற்கு சில தரப்புக்கள் நேரில் அறிவுரை கூறிய பின்னர், அழைப்பு தவறை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டார்.
அனைத்து தரப்பையும் ஒன்றிணைக்கும் பணி சுமந்திரனிடம் வழங்கப்பட்டால் அது சாத்தியமாகாது என்பதால், அனைத்து தரப்பையும் ஒன்றிணைக்கும் பணியை மாவை சேனாதிராசாவிடம் வழங்கினார்.
இதையடுத்து, மாவை சேனாதிராசா பிரதான தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி, சந்திப்பிற்கான ஏற்பாடுகளை இறுதி செய்துள்ளார்.
இதன்படி, தமிழ் கட்சிகள் எதிர்வரும் 25ஆம் திகதி மாலை இரா.சம்பந்தனின் வீட்டில் சந்திக்கவுள்ளனர்.
இதேவேளை, இந்த சந்திப்பிற்கு மறுநாள்- 26ஆம் திகதி காலையில்- தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கொழும்பில் நடைபெறும்.