கனடாவிலிருந்து வந்த குடும்பத்தினரை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற வாகன சாரதி, பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது, குருநாகல் பிரதேசத்திற்கு அண்மையில் மதிய உணவிற்காக வாகனத்தை நிறுத்திய பின்னர், வாகனத்துடன் சாரதி மாயமாகியுள்ளார்.
கனடாவிலிருந்து வந்த குடும்பத்தினர் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் அடங்கிய 9 பயணப்பொதிகளுடன் சாரதி தலைமறைவாகியுள்ளதாக குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில், மதிய உணவிற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். குடும்பத்தினர் சாப்பிட செல்லும் போது, சாரதியையும் சாப்பிட வருமாறு அழைத்துள்ளனர். எனினும், சாரதி மறுத்து விட்டார்.
தான் வாகனத்திலேயே இருப்பதாக தெரிவித்ததையடுத்து, குடும்பத்தினர் ஹொட்டலுக்கு சாப்பிட சென்றனர்.
சாப்பிட்ட பின்னர் வெளியில் வந்து பார்த்த போது, வாகனம் மாயமாகியிருந்தது.
பொலிஸ் முறைப்பாடு செய்த பின்னர், வேறு வாடகை வாகனமொன்றில் அவர்கள் யாழ்ப்பாணம் புறப்பட்டனர்.