கட்டாரில் நடைபெறும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் பட்டம் வெல்லும் பேவரைட் அணிகளாக இருக்கலாம் என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் தனது தாய் நாடான அர்ஜென்டினா அணிக்காக விளையாடுகிறார் மெஸ்ஸி. இதுவே அவர் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என தெரிகிறது. குரூப்-சி பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா அணி சவுதி அரேபியா, மெக்சிகோ மற்றும் போலந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.
“உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணி என்றால் திரும்ப திரும்ப சில அணிகளின் பெயர்களைதான் நாம் சொல்லி வருகிறோம். பிற அணிகளை காட்டிலும் பிரேசில், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகள் கொஞ்சம் டாப்பாக உள்ளது. ஆனால் உலகக் கோப்பை தொடர் மிகவும் கடினமானது, சிக்கலானதும் கூட. அதனால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். எங்களிடம் ஒரு சிறந்த குழு உள்ளது. அதோடு நாங்கள் மிகவும் ஆர்வமாகவும் உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.