துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள இஸ்திக்லாலின் பரபரப்பான வணிக வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிகுண்டு வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்தான்புல் கவர்னர் அலி யெர்லிகாயா, முதற்கட்ட தகவல்களின்படி நான்கு பேர் இறந்ததாகவும், 38 பேர் காயமடைந்ததாகவும் ட்வீட் செய்துள்ளார்.
வெடிவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
சம்பவ இடத்தில் AFP காணொளி ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில், இரண்டாவது வெடிவிபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் சேதமடைந்த பகுதிக்கு செல்ல முடியாத வகையில் பெரிய பாதுகாப்பு வளையத்தை போலீசார் அமைத்துள்ளனர்.
பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டு, அனைத்து நுழைவாயில்களும் தடை செய்யப்பட்டன.
உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான இஸ்திக்லால் வணிக வீதியில் மாலை 4:00 மணிக்கு (1300 GMT) சிறிது நேரத்தில் வெடிப்பு ஏற்பட்டது.
குண்டு வெடித்த இடத்தில் ஒரு பெரிய கறுப்புப் பள்ளமும், அருகில் தரையில் கிடந்த பல உடல்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களில் தெளிவாக தெரிந்தது.
இஸ்தான்புல்லை குறிவைத்து 2015-2016ல் நடந்த தாக்குதலின் போது இஸ்திக்லால் தெரு ஏற்கனவே தாக்கப்பட்டது.
ISIS குழுவால் நடத்தப்பட்டதாக கூறப்படும், அந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 500 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.




