கண்டி திரித்துவக் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் 20 பேர் உட்பட 24 பேர் நேற்று கல்லூரி மைதானத்தில் உதைபந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது குளவிகள் தாக்கியதில் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் 1 மணியளவில் குளவி தாக்கியதில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் ஏனையோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பெரிய மரத்தில் கட்டப்பட்ட குளவி கூட்டை குரங்கு ஒன்று தாக்கி குளவி கூட்டை கிளப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
குளவி தாக்குதலுக்கு உள்ளான மற்றும் சில மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.