ரி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தின் இன்றைய போட்டியில் நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே நெதர்லாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
அந்த அணியின் முதல் நான்கு துடுப்பாட்டக்காரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். நெதர்லாந்து அணியில் ஆக்கர்மேன் 27 ரன்னும், ஸ்கொட் எட்வர்ட்ஸ் 15 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் சோபிக்காத நிலையில், 9 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷதாப் கான் 3 விக்கெட்டும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, முஹம்மத் ரிஸ்வான் – பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தது. பாபர் ஆசாம் இரண்டாவது ஓவரிலேயே 4 ரன்களுடன் நடையைக் கட்ட, ஃபகர் ஜமான் அணிக்கு 20 ரன்களை சேர்த்து கொடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய முஹம்மத் ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணி தரப்பில், ப்ரான்டோன் க்ளோவார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.