பொன்சி திட்டம் ‘ஸ்போர்ட்ஸ் செயின்’ தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சீன பிரஜைகளையும் எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு சந்தேகநபர்களும் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஹன்சா அபேரத்ன நீதவானிடம் தெரிவித்தார்.
மேற்படி மோசடி தொடர்பில் 70க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.15 பில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2017 மற்றும் 2021 க்கு இடையில் மூன்றாவது சந்தேக நபரின் வங்கிக் கணக்கிற்கு கிட்டத்தட்ட 1.5 பில்லியன் ரூபா பணம் அனுப்பப்பட்டுள்ளதாக எஸ்சி ஹன்ச அபேரத்ன குறிப்பிட்டார்.
“சந்தேக நபர்கள் இணையம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மோசடியை செய்துள்ளனர். இந்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் சிங்களம் அல்லது ஆங்கிலம் கூட பேச முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (11) மேற்படி சம்பவம் தொடர்பில் ஷமல் கீர்த்தி பண்டார கைது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஷமல் கீர்த்தி பண்டார, சீன பிரஜை ஒருவருக்கு ‘வாட்ஸ்அப்’ ஊடாக தமது வசிப்பிடத்திலிருந்து விரைவில் வெளியேறுமாறு குறிப்பிட்டு செய்தி அனுப்பியிருந்தமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அவர்கள் இந்த மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என நீதவானிடம் தெரிவித்தார். இரண்டாவது சந்தேக நபர் இலங்கையில் உள்ள மிகப்பெரிய சீன முதலீட்டாளரின் மகன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தகுந்த ஜாமீன் நிபந்தனைகளின் கீழ் தனது வாடிக்கையாளர்களை பிணையில் விடுவிக்குமாறும் சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்தார்.
உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், சந்தேக நபர்களை எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.