அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள மெர்சிட் கவுண்டியில் இருந்து கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் 36 வயதான ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி 27 வயதான ஜஸ்லீன் கவுர் மற்றும் அவர்களது 8 மாத குழந்தை அரூஹி தேரி, அவர்களின் உறவினரான 39 வயதான அமந்தீப் சிங் ஆகியோரே கடத்தப்பட்டுள்ளனர் என்று மெர்சிட் கவுண்டி காவல் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் நால்வரையும் கடத்திச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இந்த சம்பவம் பற்றி அதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் ஒரு வணிக வளாகம் அருகிலிருந்து அவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஒருவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியா பகுதியில் இந்திய வம்சாவளியினர் அடிக்கடி கடத்தப்படுவது, மாயமாகுவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2019ல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த இந்தியர் ஒருவர் கலிபோர்னியாவில் தனது ஆடம்பரமான வீட்டில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சில மணிநேரத்தில் தனது காதலியின் காரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.