நடிகை நோரா பதேஹி, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் இன்று (15) நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.
மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டு இருந்தது.
இதனால் நேற்று நடிகை ஜாக்குலின் பெர்ண்டாஸ் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று காலை 11.30 மணிக்கு ஆஜரானார். போலீசாரின் விசாரணை முடிந்து நடிகை ஜாக்குலின் இரவு 8 மணி அளவில் விசாரணை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பிங்கி இரானியை நேருக்கு நேர் வைத்து நேற்று விசாரணை நடத்தப்பட்டது. டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு 8 மணி நேர விசாரணையில் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பியது.
ஆதாரங்களின்படி, ஜாக்குலின் மற்றும் பிங்கி இரானியின் தனித்தனி அறிக்கைகள் முன்பு பதிவு செய்யப்பட்டன. அதன்பின், இருவரையும் நேருக்கு நேர் அமர வைத்து விசாரணை நடத்தினர். ஜாக்குலின் மற்றும் பிங்கியின் பல பதில்கள் பொருந்தவில்லை. ஜாக்குலின் பல கேள்விகளுக்கு கூட சரியாக பதிலளிக்க முடியவில்லை.
சுகேஷ் சந்திரசேகர் உடனான உறவு குறித்து ஜாக்குலினிடம் டெல்லி போலீசார் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாக்குலினுக்கு ஏன் விலையுயர்ந்த பரிசுகள் கிடைத்தன, சுகேஷை எத்தனை முறை சந்தித்தார், எவ்வளவு காலமாக அவரைத் தெரியும் என்று விசாரிக்கப்பட்டது. டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு இணை ஆணையர் சாயா சர்மா மற்றும் சிறப்பு ஆணையர் ரவீந்திர யாதவ் தலைமையிலான 6 அதிகாரிகள் கொண்ட குழு ஜாக்குலினிடம் விசாரணை நடத்தியது.
சுகேஷ் சந்திரசேகர், நடிகைக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள எஸ்புவேலா என்ற குதிரையையும், தலா ரூ.9 லட்சம் மதிப்புள்ள பூனைகளையும் பரிசாக அளித்துள்ளார். இவை தவிர, 3 குஸ்ஸி டிசைனர் பைகள், 2 குஸ்ஸி ஜிம் உடைகள், ஒரு ஜோடி லூயிஸ் உய்ட்டன் காலணிகள், இரண்டு ஜோடி வைர காதணிகள், ஒரு ரூபி பிரேஸ்லெட், இரண்டு ஹெர்ம்ஸ் வளையல்கள், ஒரு மினி கூப்பர் கார் ஆகியவை வழங்கப்பட்டன.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷின் குற்றப்பின்னணியை அறிந்திருந்தார், ஆனாலும் பணத்திற்காக அவருடன் உறவில் இருந்தார். விசாரணையின் போது, ஜாக்குலின் சுகேஷுடனான உறவை ஏற்றுக்கொண்டார். சுகேஷிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வாங்கியதாக நடிகை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகேஷ் அவருக்கு ஜே மற்றும் எஸ் எழுத்துக்கள் கொண்ட வைர மோதிரத்தை கொடுத்து காதலை முன்மொழிந்தார்.
இந்த நிலையில் தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி பறித்ததாக சுகேஷ் மீது பதியப்பட்ட அதே வழக்கு தொடர்பாக நடிகை நோரா பதேஹி, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை நோரா பதேஹிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்கி கொடுத்ததாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கில் நோரா பதேஹிக்கு ஜாக்குலினுடன் நேரடி தொடர்பு இல்லை என்றும், ஆனால் பிங்கி இரானியுடன் சேர்ந்து விசாரிக்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே செப்டம்பர் 2ஆம் திகதி, இதே வழக்கில் நோரா ஃபதேஹியிடம் டெல்லி போலீசார் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.