ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி முடிவடையும் சபையின் 51 வது அமர்வில், அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள், தன்னிச்சையான தடுப்புக்காவல், முறையான இனவெறி, வலுக்கட்டாயமாக காணாமல் போதல், காலநிலை மாற்றம், நீர் மற்றும் சுகாதாரம், பழங்குடி மக்கள் மற்றும் ஆபிரிக்க வம்சாவளியினரின் உரிமைகள் மற்றும் காலனித்துவம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் குழு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் ஜெனீவா சென்றுள்ளது.
இலங்கை தொடர்பில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டால், அதன் உள்ளடக்கத்தை அரசாங்கம் பரிசீலித்து, ஏதேனும் சேதம் ஏற்படுமாயின் உடன்பாட்டை வெளிப்படுத்தும் என அமைச்சர் சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தாலும், நாட்டின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அது மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சப்ரி குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக எந்த பொறிமுறையும் செயற்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சப்ரி சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை அரசியலமைப்புச் சட்டத்திற்கும் குற்றவியல் சட்டத்திற்கும் சேதம் விளைவிக்காத வகையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதான போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரங்களுடன் இம்முறை போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை பிரயோகித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்தல் உள்ளிட்ட விவகாரங்களும் இம்முறை எழுப்பப்படும்.
இலங்கை ஏற்கெனவே வெளிப்படுத்திய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமென தமிழ் தரப்பு சர்வதேச நாடுகளை வலியுறுத்திள்ளது.
தமிழ் தரப்பின் பல்வேறு பிரதிநிதிகளும் இம்முறை அமர்விற்கு செல்வார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கல நாதனும் இம்முறை செல்கிறார்.