குடும்பத் தகராறு முற்றிய நிலையில் மருமகனை கோடரியால் தாக்கி மாமா கொலை செய்துள்ளதாக கம்பளை புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் கடந்த 6ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் புஸ்ஸல்லாவ கிராமத்தைச் சேர்ந்த அனுராத நதீஷ பத்மசிறி என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
இறந்தவர் எப்போதும் குடிபோதையில் தனது குழந்தையையும் தன்னையும் தாக்குவது வழக்கம் என உயிரிழந்தவரின் மனைவி இரேஷா உதயங்கனி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர், சந்தேகநபரின் மாமா புஸ்ஸல்லாவ பொலிஸாரிடம் வந்து தனது மருமகனை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை செய்ய பயன்படுத்திய கோடரியும் மீட்கப்பட்டுள்ளது.
45 வயதுடைய சந்தேக நபர் முன்னாள் இராணுவ வீரர் எனவும், அவரது மகளை, உயிரிழந்தவர் 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இறந்தவர் பணி நிமித்தமாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று மூன்று நான்கு வாரங்களுக்கு ஒருமுறை வீடு திரும்புவதும் இம்முறை தனது குழந்தையின் மூன்றாவது பிறந்தநாளை முன்னிட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் மது போதைக்கு அடிமையானவர். நாள் முழுவதும் குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் மாமாவுடன் தகராறு செய்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கம்பளை பதில் நீதவான் ஆர்.ரணதுங்க இங்கு நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை கண்டி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பணித்தார்.




