மக்கா வெறுப்பை விதைக்கும் இடமல்ல; சவூதியில் இடம்பெற்ற விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது!

Date:

புனித மக்கா என்பது வெறுப்பையும் பிரிவினையையும் வளர்க்கும் இடமல்ல; மாறாக மன்னிப்பு, ஒற்றுமை மற்றும் மனிதாபிமானத்தின் உயரிய பண்புகளை நினைவூட்டும் புனிதத் தளம் ஆகும் என ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பருவத்தின் போது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் அர்கம் நூராமித் மௌலவி அவர்கள் மினா பகுதியில் சவுதி பாதுகாப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவதாகவும், தனது எல்லைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் உரிமை சவூதி அரேபியாவிற்கு இருப்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

எனினும், செல்லுபடியாகும் விசாவின் கீழ், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) ஒதுக்கீட்டின் கீழ் ஹஜ் பயணத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முன்னர், அவரது தாய்நாட்டின் இராஜதந்திர பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி தனது கடமைகளின் அடிப்படையில் செயல்பட்ட நிலையில் அவர்மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகளுக்குப் பதிலாக, இலங்கையும் சவுதி அரேபியாவும் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சு, கொழும்பிலுள்ள சவுதி தூதரகத்துடனும், ரியாத் மற்றும் ஜெத்தாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடனும் இணைந்து முழுமையான அறிக்கையைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன், அஷ் ஷெய்க் அர்கம் நூராமித் மௌலவி அவர்கள் தனிப்பட்ட முறையில் அல்லாது, அதிகாரப்பூர்வ அரசாங்கக் குழுவின் தீர்மானங்களின் அடிப்படையில் செயல்பட்டார் என்பதையும் சவூதி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாத வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, ஹஜ் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் பட்டியலையும் முன்கூட்டியே பரிமாறிக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

“மக்காவின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பது சவூதி அரேபியாவின் பொறுப்பு; அதேவேளை தனது குடிமக்கள் மற்றும் அதிகாரிகளின் மரியாதையைப் பாதுகாப்பது இலங்கையின் பொறுப்பு. இந்த இரண்டிற்கும் இடையில் மோதல் அல்ல, புரிந்துணர்வும் உரையாடலுமே நிலவ வேண்டும்” என கலீலுர் ரஹ்மான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளையும் பரஸ்பர மரியாதையையும் பேணும் வகையில், இவ்விவகாரம் உரையாடல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்