ஆசியக் கோப்பை தொடரில் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை, சூப்பர் 4 சுற்றிற்குள் நுழைந்தது.
டுபாயில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பங்களாதேஷை 2 விக்கெட்டுக்களால் இலங்கை வீழ்த்தியது. பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகியன சூப்பர் 4 சுற்றிற்கு முன்னேறியுள்ளன.ஏ பிரிவில் இந்தியா முன்னேறியுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் ஆடிய பங்களாதேஷ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை குவித்தது. கடைசி 5 ஓவர்களில் 60 ஓட்டங்களை குவித்தனர். அபிப் ஹொசைன் 39, மெஹிடி ஹசன் 38 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் கருணாரத்ன, ஹசரங்க தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இலக்கை விரட்டிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
ஒரு கட்டத்தில் 77 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்கள் என்ற இக்கட்டான நிலையிலிருந்த போது, குசல் மென்டிசும், கப்டன் தசுன் சானகவும்இணைந்து அணியை மீட்டெடுத்தனர். மென்டிஸ் 37 பந்துகளில் 60 ஓட்டங்கள், சானக 33 பந்துகளில் 45 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் இபாடொட் ஹொசைன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பி பிரிவில் 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த பங்களாதேஷ் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த மைதானத்தில் ரி20 போட்டிகளில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுதான்.
இலங்கையின் சூப்பர் 4 சுற்று போட்டிகள்.
இலங்கை vs ஆப்கானிஸ்தான் – செப்டம்பர் 3 – ஷார்ஜா
இலங்கை vs இந்தியா – செப்டம்பர் 6 – டுபாய்
இலங்கைvs பாகிஸ்தான் அல்லது ஹொங்கொங் – செப்டம்பர் 9 – டுபாய்