கூட்டமைப்பை விட்டு வெளியேறுமா தமிழ் அரசு கட்சி?: எம்.பியொருவரின் ஆதரவாளர்கள் ‘அக்கப்போர்’!

Date:

தமிழ் தேசியகூட்டமைப்பிலிருந்து வெளியேறி இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து செயற்பட வேண்டுமென்ற அபிப்பிராயம், கட்சிக்குள் வேகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. கட்சியின் அண்மைய உள்ளக கலந்துரையாடல்களில் மெதுமெதுவாக பகிரங்கப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அபிப்பிராயத்தை வளர்ப்பதில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே பின்னணியில் செயற்பட்டு வருவதாக, தன்னை வெளிக்காட்ட விரும்பாதா முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தவிசாளர் பதவிக்கு போட்டியிடும் உள்ளூராட்சி மன்றங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அந்த பிரமுகரின் ஆதரவாளர்கள் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சச்சரவுகள், குழப்பங்கள் நீண்ட காமாக இருந்து வருகிறது. இருந்தாலும், தற்போது தீவிரமடைந்துள்ள அளவிற்கு, எப்பொழுதும் முறுகல் ஏற்பட்டிருக்கவில்லை.

இதற்கு முன்பாக, இலங்கை தமிழ் அரசு கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட சீண்டும், பரஸ்பரம் கௌரவம் வழங்கும் அணுகுமுறைக்கு மாறான நடவடிக்கைகளிற்கு பங்காளிக்கட்சிகள் தீவிரமாக எதிர்வினையாற்றியிருக்கவில்லை. ஒருவகையான நழுவல் பாணி அணுகுமுறையை பங்காளிக்கள் கடைப்பிடித்தனர். இதனால் பெரியண்ணன் பாணியில் தமிழ் அரசு கட்சி செயற்பட்டு வந்தது.

எனினும், தற்போது நிலைமை அப்படியல்ல. தமிழ் அரசு கட்சி எப்படி செயற்படுகிறதோ, அப்படியே செயற்பட்டு சுடச்சுடபதிலடி கொடுக்கும் அணுகுமுறையை ரெலோ கடைப்பிடிக்கிறது.

இதனால் ‘முரட்டு அண்ணன்’மனநிலையில் இருக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களிற்கு அதிர்ச்சியும், கோபமும் ஏற்பட்டுள்ளது.

அந்த தரப்பினர், கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனித்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்ற அபிப்பிராயத்தை கட்சிக்குள் உருவாக்கி வருகிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ்மாவட்ட கிளைக் கூட்டம் நடந்த போதும், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமென்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தமிழ் பக்கத்திடம் பேசிய கட்சியின் பிரமுகர் ஒருவர் –

”தமிழ் அரசு கட்சி தனித்து உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற கருத்து அண்மைய நாட்களில் கட்சிக்குள் தீவிரம் பெற்று வருகிறது.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இதன் பின்னணியில் உள்ளார்.  அவரது ஆதரவாளர்கள்தான் அண்மைய நாட்களில் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகள் பறிபோவதற்கு காரணமாகவும் அமைந்திருந்தனர். இப்படி குழப்பத்தில் ஈடுபடுபவர்கள் இளையவர்கள். கடந்த ஓரிரு வருடங்களாக அரசியலில் ஈடுபடுபவர்கள். தமிழ் தேசிய அரசிலை தேர்தல் அரசியலாக மட்டும் விளங்கிக் கொண்டவர்கள்.

இதேவேளை, கட்சியின் நீண்டகால  உறுப்பினர்களாக இருந்தபோதும், முக்கியபதவிகளிற்கு வர முடியாதவர்களில் ஒரு பகுதியினரும் இந்த கோசத்தை  ஆதரிக்கிறார்கள். தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டால்,  தமக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமென அவர்கள் நம்புகிறார்கள்” என தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் யாழ் மாவட்ட குழுக்கூட்டத்தில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி காரசாரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

வலிகிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் பதவியை ரெலோவும், இலங்கை தமிழ் அரசு கட்சியும் பங்கிடுவதாக தேர்தல் காலத்தில் இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது. தற்போது அதன் தவிசாளராக ரெலோவின் நிரோஷ் செயற்படுகிறார்.

எனினும், பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகளால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சபைகள் பல பறிபோயின. தேர்தல் கால இணக்கப்பாட்டின் படி, தவிசாளர் மாற்ற முயன்ற போதும், வேறு சந்தர்ப்பங்களிலும் கூட்டமைப்பின் சபைகள் வரிசையாக பறிபோயின.

இதையடுத்து, வலிகிழக்குபிரதேசசபை தவிசாளர் பதவியை மாற்றுவதில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சியும், ரெலோவும் பேசிக்கொண்டன.

இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. தற்போதைய தவிசாளர் நிரோஷின் செயற்பாடு பரவலாக பாராட்டப்பட்டது. அவரை மாற்றி, தற்போதுள்ளதை போல சிறப்பாக இயங்க வைக்க தமிழ் அரசு கட்சி சார்பில் ஆளுமையான உறுப்பினர் யாருமில்லை.

இந்த பின்னணியில், வலிகிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் மாற்றம் எதிர்வரும் செப்ரெம்பர் 5ஆம் திகதிக்குள் நடக்க வேண்டுமென்றும், அப்படி நடக்காத பட்சத்தில் கட்சியின் தொகுதிக்கிளை தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என பரஞ்சோதி அறிவித்தார்.

தமிழ் தேசிய அரசியலில் நீண்டகாலமாக செயற்பட்டு வரும் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம் போன்றவர்கள் கட்சியின் பிரதான பாத்திரங்களை வகிப்பதால், தமிழ் மக்களை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தும் இப்படியான ‘விடலைத்தன’ முடிவுகளை அனுமதிக்க மாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், கட்சிக்குள் அது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியே ஓயும்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்