மிக இளவயதில் நாடொன்றின் தலைவரானவர் என்ற பெருமைக்குரியவர், பின்லாந்து பிரதமர் சன்னா மரின்.
2019 ஆம் ஆண்டில் தனது 34 வயதில் அரச தலைவரான உலகின் இளையவர் என்ற பெருமைக்குரிய சன்னா மரின் இப்பொழுது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இரவு நேர கேளிக்கையொன்றில் அவர் மெய்மறந்து காட்டுத்தனமாக நடனமாடும் வீடியோ வெளியாகி, பின்லாந்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் போதைப்பொருளை உட்கொண்டு விட்டு, இப்படி நிலைமறந்து ஆடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, அவர் “பிரதமருக்கு தகுதியானவர் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளன..
ஆனால் 36 வயதான அவர் போதைப்பொருள் உட்கொண்ட குற்றச்சாட்டை மறுத்தார். மதுவை மட்டுமே அருந்தியதாகவும், “கொந்தளிப்பான வழியில்” பார்ட்டி செய்ததாகவும் கூறினார்.
பின்லாந்தின் ஊடகங்களில் அந்த வீடியோக்கள் வெளியானதை விமர்சித்தார். “அவர்கள் பொதுவில் ஒளிபரப்பியதில் நான் ஏமாற்றமடைந்தேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“நான் மாலை நேரத்தை நண்பர்களுடன் கழித்தேன். பார்ட்டி, அழகான நிகழ்ச்சி, ஆம். ஆடினேன், பாடினேன் – சட்டப்படியான விஷயங்களையே செய்தேன்’ என விளக்கமளித்துள்ளார்.
‘ நான் மற்றவர்கள் [போதை மருந்துகளைப் பயன்படுத்துவதை பார்த்த அல்லது தெரிந்த சூழ்நிலையில் நான் இருந்ததில்லை’ என்றார்.
சில வாரங்களுக்கு முன்பு மரின் பல பின்லாந்து ஊடகவியலாளர்களுடன் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கேளிக்கையில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்களெ பரவுவதாக நம்பப்படுகிறது.
சன்னா மரின் தனாகவே முன்வந்து போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரான ரிக்கா புர்ரா அழைப்பு விடுத்தார்.
எனினும், சன்னா மரின், தனக்கு “சோதனைகள் எடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்றும், தன் நடத்தையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
“எனக்கு குடும்ப வாழ்க்கை உள்ளது, எனக்கு வேலை வாழ்க்கை உள்ளது. என் வயதுடைய பலரைப் போலவே எனது நண்பர்களுடன் செலவழிக்க எனக்கு ஓய்வு நேரம் உள்ளது” என தெரிவித்துள்ளார்